headlines

img

விசுவாசத்திற்கு விருதா?

இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான விருது தமிழக அதிமுக அரசுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது கேலிக்கூத்தானது. தேசிய நல்லாட்சி தினத்தை யொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் குறை தீர்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் கேலிக்கூத்தான விசயம் என்ன வென்றால் சட்டம் - ஒழுங்கை பராமரித்து பொதுமக்களை பாதுகாத்து வருவதிலும் தமிழ கம் முதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ள தாகும். பொது மக்களின் நலனை பாதுகாக்க போராடுபவர்களின் மீது வழக்கு தொடுப்பதில் தமிழக அதிமுக அரசு முதலிடத்தில் இருப்பதாக கூறியிருந்தால் அதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் பேரணி சென்ற தற்காக  எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போராட்டத்திற்கும் நீதிமன்றங்க ளை அணுகித்தான் காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டிய அவல நிலை உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் லட்சணத்திற்கு சாட்சி கூறும்.

எட்டு வழிச்சாலை, உயர் மின்னழுத்த கோபுரம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய வற்றை எதிர்த்து போராடுபவர்கள் மீதும் அடக்கு முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.  இதுதான் நல்லாட்சிக்கான இலக்கணமா? பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் தொடர்புடையவர்கள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப் பட்டது, மேலவளவு கொலை வழக்கில் தண்டிக் கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது போன்றவை நிர்வாகத்தின் மீதான அழிக்க முடியாத கறையாகும். 

முதல்வர், துணை முதல்வர் துவங்கி பெரும் பாலான அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. பணி நியமனம், பணி மாற்றம் என பணம்  இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இது நல்லாட்சிக்கான அடையாளமா?

ஒரு விசயத்தில் தமிழக அதிமுக அரசுக்கு தடையில்லாமல் விருது கொடுக்கலாம். அதாவது மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட் டங்களை பாஜக ஆளும் மாநிலங்களை முந்திக் கொண்டு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயல்வதில் அதிமுக அரசை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. புதியக் கல்விக்கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தி வருவது இதற்கு உதாரணமாகும். 

அரசுப் பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகளை மேலும் மேலும் திறந்து மாநிலத்தை குடி நோயாளிகளின் கூடாரமாக மாற்றிக் கொண்டிருப்பதுதான் சிறந்த நிர்வாகம் எனில் அதற்கான விருதை அதிமுக அரசுக்கு வழங்குவதில் அட்டியில்லை.

;