headlines

img

அரசியலமைப்பு மீது தாக்குதல்

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராக இருப்பதே மக்களாட்சி முறைதான். ஆனால் அதனை தகர்த்திடும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் கேவலமான செயல்பாட்டை பாஜக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை  தேர்த லில் மக்கள் நிராகரித்தனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க அக்கட்சி ஆளுநரை பயன்படுத்தியது. நீதி மன்றம் தலையிட்டு அம்முயற்சியை முறியடித்தது. அதன் பின்னர் அருணாச்சல மக்கள் கட்சியை சேர்ந்த 33 எம்எல்ஏக்களை ஒரே நேரத்தில் விலை பேசி பாஜகவிற்கு கொண்டு சென்று அதிகாரத்தை கைப்பற்றினர். அதே போல் கோவாவில் பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை விலைபேசி பாஜகவில் இணைத்துக் கொண்டு அங்கும் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 

அதே வழியிலேயே தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 16 எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மக்களாட்சி முறையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருகட்சி குறுக்குவழியில் ஆட்சியமைக்க முயல்வதே சட்ட விரோதம். அதன் காரணமாகவே காட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தையே ஏற்படுத்தும். சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் இதே நடைமுறையைத் தான் பாஜக பின்பற்றியது. குஜராத், கர்நாடகா, புது தில்லியில் பாஜக மாநிலங்களவை வேட்பாளர்க ளுக்கு வாக்களிக்க எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ரூ. 50 கோடி வரை பேரம் பேசியது அம்பலமாகி சந்தி சிரித்தது. ஆனால் பாஜக சுத்தமான கட்சி, ஊழல் இல்லாத கட்சி என கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ்சின்  இலக்கான ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தேசம் என்ற சர்வாதி கார ஆட்சியை ஏற்படுத்திட வேண்டும் என மோடி அரசு முயன்று வருகிறது.

அதன் அடுத்த கட்டமாக மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என பாஜகவின்  ஆள்தூக்கி திட்டம் அரங்கேற்றப்படும் என தகவல்கள் வெளி யாகியிருக்கின்றன. இது  இந்திய அரசியலமைப் பின் முகவுரையில் கூறியிருக்கிற மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு என்ற கட்ட மைப்பையே தகர்த்துவிடும். இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிரான பாஜகவின் இந்த முயற்சியை முறியடித்திட அனைத்து பகுதி மக்களும் பாஜவிற்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர  வேண்டும்.

;