headlines

img

விலை குறைப்பு எனும் நாடகம்

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியில் ஒரு பகுதியை குறைத்துள்ளதாக ஒன்றிய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள் ளார். அதாவது பெட்ரோலுக்கான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு 1லட்சம்  கோடி ரூபாய் வருவாய்  இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

உண்மையில் அடுத்தடுத்து கடுமையாக ஏற்றப்பட்ட கலால்வரியில்தான் ஒரு பகுதி  குறைக்கப்பட்டுள்ளதே தவிர, ஏதோ மொத்த மாக வரியை குறைத்துவிட்டது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு  முயல்கிறது. தினந்தோறும் பெட்ரோல், டீசல்  விலை உயர்வு என்ற அறிவிப்பால் விழிபிதுங்கி நின்ற மக்களுக்கு வரி குறைப்பு என்பது ஆறுத லாக இருந்தாலும் இது உண்மையான விலை  குறைப்பு அல்ல. ரூ.27லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி மக்களி டம் வழிப்பறி செய்துவிட்டு ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும் என மாய்மாலம் செய்கிறார்கள். உண்மையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வாலும் சமையல் எரிவாயு மானியம் விலை உயர்வாலும் மக்கள் இழந்தது பல லட்சம் கோடியாகும். 

அடுத்து சிலிண்டர் விலையையும் குறைத்து விட்டதைப் போல உஜ்வாலா போஜனா சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் முதல் சிலிண்டரைப் பெற்ற ஒரு கோடிப் பேருக்கும் மேல் அடுத்த சிலிண்டரை வாங்கவே  இல்லை. இதற்கு காரணம் சமையல் எரிவாயு உருளையின் கடுமையான விலை உயர்வு ஆகும். 

இதுவரை உஜ்வாலா கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மானியம் வழங்கப்பட வில்லை என்பதையே மறைமுகமாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம்  உறுதிப்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. ஆனால்  சமையல் எரிவாயு விலை கடந்த வாரம் கூட  உயர்த்தப்பட்டது. அவர்களுக்கு எந்த நிவாரண மும் இல்லை. ஏற்கெனவே கொடுத்துக் கொண்டிருந்த மானியத்தை உங்கள் பணம்  உங்கள் கையில் என்று அறிவித்து நேரடியாக  வங்கிக் கணக்கில் போடுவதாகச் சொன்ன வர்கள் கிட்டத்தட்ட அந்த மானியத்தை நிறுத்திவிட்டார்கள். இப்போது சிலிண்டருக்கு ரூ.200 மானியம் என்பதும் பெரும்பகுதி மக்க ளுக்கு பலனளிக்கப் போவதில்லை. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து  அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. ஒன்றிய அரசின் இப்போதைய அறிவிப்பு விலைவாசி உயர்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிராகவே உள்ளது. இப்போது கூட ஒன்றிய அரசுக்கு முழுமையாக கிடைக்கும் செஸ்வரியை குறைக்க முன்வரவில்லை.  ஒட்டகத்தின் முதுகில் தாங்க  முடியாத சுமையை ஏற்றிவிட்டு ஒரு சிறு மூட்டை யை மட்டும் எடுத்தால் ஒட்டகம் வேண்டுமானால் ஏமாறலாம். மக்கள் ஏமாறமாட்டார்கள்.

;