headlines

img

அரசியல் பிழைத்தோர்க்கு...

ஆன்மீகத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று பாஜகவின் தமிழக தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இந்திய நாட்டின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ஆன்மீகத்தை யும் அரசியலையும் இணைத்துப் பார்த்தது தான். விடுதலைப் போராட்டக் காலத்தில் அந்நியரை  எதிர்த்த போராட்டத்தில் ஆன்மீகத்தை இணைத்ததில் திலகர், காந்தி முக்கியமான வர்கள். ஆயினும் இன்றைய பாஜகவின் முன்னோடி அமைப்பான ஆர்எஸ்எஸ், இந்து  மகாசபை தலைவர்கள் மதரீதியில் நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கையை முன் வைத்த னர். அதையடுத்தே முஸ்லிம் லீக்கும் பிரிவினை கோரிக்கையை எழுப்பியது.

காந்தி ஆன்மீகவாதியாக இருந்தாலும் இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும் நல்லி ணக்கத்தையும் வலியுறுத்தியவர். நாட்டின் பிரிவினையை எதிர்த்தவர். மதம், மனிதரின் தனிப்பட்ட விஷயம். அதை அரசியலுடன் கலக்கக் கூடாது என்றவர். அதனாலேயே பாஜக கொண்டாடும் கோட்சேயால் கொல்லப்பட்டவர்.

அதனால் தான் நாடு பிரிவினையின் துயரத்தைக் கடந்து, மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக, சோசலிசக் குடியரசாக நம் முன்னோர் களால் உருவாக்கப்பட்டது. அது விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களில் ஒன்றானது. அதுவே இந்திய அரசியலின் அறமானது.

ஆனால் இன்றைய இந்துத்துவா - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் - பாஜகவின் ஆட்சி, ஒரே நாடு, ஒரே மதம் என மதச்சார்பு நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அதனால் தான்  பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது பூசாரி போலவே செயல்பட்டார்.

இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் தங்களது பத்தாண்டு காலச் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாததால் கோவில் திறப்பு, ஆன்மீகம் என்று மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். தோல்வி பயம் காரண மாக கோவில்களையும் சுற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதி தான் அண்ணாமலை பேரூர் ஆதீனத்தை வணங்கியிருக்கிறார்.

அத்துடன் எப்போதெல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ அவர்கள் நேரடியாக ஆதினங்கள், குருமார் களை சந்தித்து அறிவுரைகளை பெற்று  செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அண்ணாமலை தவறு செய்திருப்பதால்தான் பேரூர் ஆதீனத்தை சந்தித்திருக்கிறார் போலும். அத்துடன், எப்போதுமே அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அறத்துக்கும் அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது சிலப்பதிகார நீதி!

;