headlines

img

மோடி தான் இந்தியாவா?

பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது என்பார் கள்; குஜராத் படுகொலை அதனினும் கொடியது; 2002ஆம் ஆண்டு முதல்வராக மோடியும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்த காலத்தில் சிறுபான்மை மக்கள் மீது இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய கொடூர கொலை வெறியாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு தகவல்படி இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்தான் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கொடூரம் நிகழ்ந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களையும் அராஜகங்களையும் பற்றி அண்மையில் பிபிசி  செய்தி நிறுவனம் ‘இந்தியா; மோடிக்கான கேள்வி’ என்ற ஆவ ணப்படத்தை இரு பகுதிகளாக இந்தாண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. உடனேயே ஒன்றிய பாஜக அரசு அதற்கு தடை விதித்துவிட்டது. அத்து டன் அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் மீது  வருமான வரித்துறையை ஏவி சோதனை என்ற  பெயரில் மிரட்டல் விடுத்தது. ஆயினும் அந்த நிறு வனம் தான் வெளியிட்ட படத்துக்கு ஆதாரங்கள் இருப்பதாகவே கூறியது. 

இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஆன் டிரையல் என்கிற என்ஜிஓ அமைப்பு தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தி ருக்கிறது. அதில் 2002ஆம் ஆண்டு கலவரம் பற்றி பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்தியாவின் புகழை களங்கப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக் கிறது. அத்துடன் இந்திய நீதித்துறை குறித்து தவறான, அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்றும் கூறியி ருக்கிறது. அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணைக் கான நீதிமன்ற கட்டணத்தை செலுத்தும் வகை யில் இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க பிபிசிக்கு உத்தரவிட வேண்டுமென் றும் கோரியிருக்கிறது.

இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, பிரிட்டனில் உள்ள பிபிசியும் அதன் இந்திய கிளையும் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை பிபிசி நிறுவனம் எதிர்கொள்வது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் வழக்கு செலவுக்காக, அதுவும் இடைக் கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி கேட்பது என்பது அந்த நிறுவனத்தை மிரட்டுகிற செயலே ன்றி வேறென்ன?

மோடி மீது குற்றம் சாட்டினால் அது இந்தியா மீது குற்றம் சாட்டுவதாக அந்த என்ஜிஓ நிறுவனம் கருதுவது ஏன்? அந்த கொடூரம் நிகழ்ந்த காலத்தில் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய், இனி நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன் என்று கூறியது எதைக்குறிக்கிறது? ஏன்? குஜராத் நீதிமன்றத்தில் மோடியின் மீது ஆதா ரங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டதால் அவருக்கும், அந்த கொடூரத்திற்கும் தொடர்பே இல்லை என்று ஆகிவிடுமா? மகாத்மா காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாவர்க்கர் கூட ஆதாரம் இல்லை என்பதால்தான் விடு விக்கப்பட்டார். ஆனால் உண்மை அதுவல்லவே. மோடி விசயத்திலும் அதுதானே நிகழ்ந்தது. 

;