headlines

img

நாடாளுமன்றம்: மோடி அரசுக்கு கடிவாளம்

18ஆவது நாடாளுமன்றக் கூட்டம் திங்களன்று துவங்கியுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவி யேற்றுக் கொள்கின்றனர். கடந்த இரண்டு முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழா விற்குக் கூட குடியரசுத் தலைவரை மோடி அரசு அழைக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பொதுவாக அதிக முறை உறுப்பினராக இருந்தவரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப் படுவது வழக்கம். அவர்தான் புதிய உறுப்பினர்க ளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டி யல் வகுப்பைச் சேர்ந்த கேரள எம்.பி., கொடுக்குன் னில் சுரேஷ் தான் தற்காலிக சபாநாயகராக நிய மிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏழு முறை மட்டுமே உறுப்பினராக இருந்த பர்த்ருஹரி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இதனை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி கள் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன.

நாடாளுமன்றத்தின் துவக்க நாளில் இந்தியா  கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் மகாத்மா  காந்தி சிலை அருகில் கூடியபின், அரசியல் சட்டப் புத்தகத்தை ஏந்தி நாடாளுமன்றத்திற்குள் சென்றுள்ளனர். அரசியல் சட்டத்தை பாதுகாப்ப தற்கான வலிமை மிக்க போராட்டத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்தும் என்பதை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. 

கடந்த இரண்டு முறையும் நாடாளுமன்றத்தை மோடி அரசு நடத்திச் சென்ற விதம் ஜனநாயகப் பூர்வமானதாக இல்லை. அதி முக்கியமான சட்ட முன்வரைவுகள் கூட விவாதமின்றி நிறைவேற்றப் பட்டன. ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் போது நாடாளு மன்றத்தை நடத்த விடாமல் ஆளும் கட்சியினரே ரகளையில் ஈடுபட்டு அவையை முடக்கினர். மோடியின் நண்பரான அதானியின் ஊழல்களை, ஹிண்டன் பர்க் ஆய்வு அம்பலப்படுத்திய போது, அதை விவாதிக்க விடாமல் ஆளும் கட்சி அவையை முடக்கியது இதற்கு ஒரு உதாரணமா கும். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக் கக் கோரிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒட்டு மொத்த மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் நடந்தது.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை மதிப்பதே யில்லை. அவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்பதும் இல்லை. முக்கிய விவாதங்களுக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் இம்முறை ‘மைனாரிட்டி’ அரசாக குறுகிப் போயுள்ள மோடி அரசுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. பலமான எதிர்க்கட்சிகளின் அணிவகுப்பு நாடாளுமன்றத்தை ஜனநாயகப்பூர்வமாக வழிநடத்திச் செல்லட்டும்.

;