headlines

img

நீட் தேர்வு - ஒன்றிய அரசுக்கு தகுதியோ தரமோ இல்லை

மருத்துவ முதுநிலை சேர்க்கைக்கான நீட்  தேர்வு(பி.ஜி.நீட்) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. தேசிய தேர்வு  வாரியம் நடத்தும் யுஜிசி - நெட் தேர்வு ரத்தான தைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவ சேர்க்கைக் கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் இந்த தேர்வு முறையே மோசடியானது, முறை கேடானது, அர்த்தமற்றது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

தகுதி, தரம் என்ற வார்த்தைகளைக் கொண்டு  புனையப்பட்டுள்ள நீட் தேர்வை நடத்தும் தகுதியோ  தரமோ ஒன்றிய அரசுக்கு தேசிய தேர்வு வாரி யத்திற்கும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் லட்சக்கணக் கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு இந்த  தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதானது மருத்துவ  உயர்கல்வி கனவோடு இருந்த மாணவர்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது. மாணவர் களின் நலனையும், மனநலனையும் ஒன்றிய அரசு கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. 

முதுநிலை மருத்துவத்திற்கான நீட்தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர் களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தேர்வு மையம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு  நாட்களுக்கு முன்பே தேர்வு எழுதும் மையம் அமைந்துள்ள ஊர்களுக்கு மாணவர்கள் சென்று தங்கியிருந்த நிலையில் இரவு திடீரென  தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இந்த தேர்வை நடத்த வக்கில்லை என்றால் குறைந்தபட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாகவே தேர்வு ஒத்திவைக்கப்படுவதை அறிவித்திருக்கலாம். 

இந்தியா முழுவதும் 297 மையங்களில் 2லட்சத்து 28 ஆயிரத்து 757 மருத்துவர்கள் நீட்  தேர்வு எழுத தயாராக இருந்தனர். காலை 9 மணிக்கு தேர்வு துவங்கவிருந்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு  மையத்திற்கு சென்றுவிட வேண்டும் என அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்காலத்தில் இந்தத்  தேர்வின் மூலம் எழும் பிரச்சனைகளை தவிர்ப்ப தற்காகவும் தேர்வை ஒத்திவைப்பதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது என்பதை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டுமானால் நீட் தேர்வு முறைக்கு நிரந்தர விடை தருவது ஒன்றே வழி.  கல்வித்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக மீண்டும் கொண்டுவருவதும் அந்தந்த மாநி லங்களில் உயர்கல்விக்கான சேர்க்கையை மாநில அரசே முடிவு செய்துகொள்ள விட்டுவிடுவதும் ஒன்றே இந்தச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு.