headlines

img

விடிவு பிறக்கட்டும்

“சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையோர் மேலோர்” என்றார் மகாகவி பாரதி. ஆனால் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும்  இன்றும் தீண்டாமையின்  கோரத்தாண்டவம் தொடரத்தான் செய்கிறது. ஆதியில் இன்றி   பாதியில் வந்த சாதி, கரு வறையிலிருந்து கல்லறைவரை  ஒற்றுமையைச் சீர்குலைத்து, சமூகத்தைச் சீரழித்து வருகிறது.

இந்த நிலையிலேயேதான்  சென்னை உயர் நீதிமன்றம் அருந்ததியர்களுக்குச் சுடுகாடு கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.  தமிழக மயானங்களில் உள்ள சாதிப் பெயர்ப் பலகைகளை அரசு அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சாதிய பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயா னங்களை அரசே உருவாக்க வேண்டும். எந்த பாகு பாடுமின்றி அனைத்து சாதியினரும் பொது மயா னங்களைப் பயன்படுத்த உரிமை உள்ளது. மீறி யாரொருவர் செயல்பட்டாலும் அவர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.மகாதேவன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பே சமூக சீர்திருத்த இயக்கங்கள் முன்னெடுக்கப் பட்டாலும் இன்னும் முழுமையாக தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை. பல வடிவங்க ளில் தீண்டாமையும், ஆணவக் கொலைகளும் தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றன. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைக்குனிவே ஆகும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை என்கிற தமிழக அரசின் உத்தரவு வரவேற்க  வேண்டிய ஒன்று. அதே போன்று உச்ச நீதி மன்றத்தின் உத்தரவிற்கேற்ப ஆணவக் கொலை களைத் தடுப்பதற்கான சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்றிட வேண்டும். 

தேசிய அளவில் பார்த்தால் பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துக்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காரணம் ஆர்எஸ்எஸ் -சின் அடிப்படையே வர்ணாசிரம முறை தொடர வேண்டும் என்பதே ஆகும். 2016 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத் தின் படி தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்கு களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 25.6 விழுக்காடும், பீகாரில் 14 விழுக்காடும், ராஜஸ்தா னில் 12.6 விழுக்காடும் பதிவாகியிருக்கின்றன. சாதி, மத கட்டமைப்பைத் தக்க வைக்க  சங்பரிவார் கூட்டம் மதத்தை மிக நுட்பமாகப் பயன்படுத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டு பாஜகவைத் தனிமைப்படுத்திட வேண்டும். 

“சாதி என்பது பெரிய சுவரோ, வேலியோ இல்லை, ஆயுதங்களைக் கொண்டு தகர்த்திட. அது மனித மூளைக்கு இடப்பட்ட விலங்கு. சமூக மாற்றத்தால்தான் அதை ஒழிக்க முடியும்” என்றார் அம்பேத்கர்.  சமூக மாற்றம் ஏற்பட இப்போதி ருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறை அவ்வ ளவு எளிதாக அனுமதிப்பதில்லை. நிலப்பிர புத்துவ கால சாதியைத் தக்கவைக்க எல்லா வேலைகளையும்  முதலாளித்துவம் செய்கிறது. எனவே முதலாளித்துவ அமைப்பை தகர்ப்பதன் மூலமே சமத்துவ சமூகத்தைப் படைத்திட முடியும். 

;