headlines

img

எதற்கு அரசாங்கம்...?

இந்திய பாதுகாப்புத் துறையை 7 கூறுகளாகப் போட்டு கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கும் நிகழ்ச்சியைக் கொண்டாடுவது என மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்குப் பாதுகாப்புத் துறை ஊழியர்களையும் பஜனை பாட அழைத்தி ருக்கிறது. ஆனால் பாதுகாப்புத் துறை ஊழி யர்கள் கருப்புப் பட்டை அணிந்து குடும்பத்தோடு எதிர்ப்பு தெரிவிப்போம் என  அறிவித்திருக்கின் றனர். 

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு என்ற போது, தேச பாதுகாப்பே பறிபோயிடும் என போலியாக கண்ணீர் வடித்தது பாஜக.  ஆனால் இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன்  நாட்டின் பாது காப்பை நல்ல விலைக்கு விற்கத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் , ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்” என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று ஒன்றிய பாஜக அரசு   ஆயுதம் செய்யும் தொழிற்சாலையையும் விற்போம் என்கிறது. 

சொல் ஒன்றும் செயல் ஒன்றாக இருப்பதுதான் மோடி அரசின் தனிச்சிறப்பு. 2018ல் 221 ராணுவத் தளவாட பாகங்களை ‘’மேக் இன் இந்தியா’’ திட்டத்தின் கீழ் 2020க்குள்  தயாரிப்போம்  என்றது. ஆனால் அது நிறைவேறவில்லை. அடுத்து “ஆத்ம நிர்பார்”  சுயச்சார்பு இந்தியா என்றது. அடுத்ததாக பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 விழுக்காட்டிலிருந்து 74 சதவிகிதமாக அகலத் திறந்து விட்டது. 

‘’ஆடத்தெரியாதவர்  தெரு கோணல்’’ என்று சொல்வது போல், தற்போது அரசு ராணுவ உற்பத்தி சாதனங்கள் சரியில்லை என மோடி அரசு கூறுகிறது.  தனியார் உற்பத்திதான் தலைசிறந்தது எனக் கூச்சலிடுகிறது. மும்பை தாக்குதலில் தீவிரவாத தடுப்பு காவல்துறைத் தலைவராக இருந்த ஹேமந்த கார்கரே அணிந்திருந்த புல்லட் ஃபுரூப் ஜாக்கெட்டும்  தனியார் நிறுவனம் தயா ரித்ததுதான். துப்பாக்கிக் குண்டு வந்த போது அதன் தரம் எங்கே போனது?

இந்தியா இதுவரை ஐந்து போர்களைச் சந்தித்திருக்கிறது. இந்த போர்களில் வெற்றி பெறுவதற்குப் பேருதவியாக இருந்தது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தளவாடத் தொழிற் சாலைகள்தான். கார்கில் போரின் போது தனி யாரிடம் போட்ட 129 ஒப்பந்தங்களின் படி உரிய காலத்தில் ஆயுதங்களை வழங்க வில்லை. போர் முடிந்த பின்னரே வந்தன என்று ஒன்றிய தணிக்கை துறை அம்பலப்படுத்தியது.  அது மட்டுமல்ல கார்கில் போரில் சவப்பெட்டியிலும் ஊழல் செய்து சாதனை படைத்தது இதே பாஜக அரசுதான். தற்போதும் கூட  ரபேல் விமான பேர  ஊழல் நாற்றம் பிரான்ஸ் வரை நீண்டிருக்கிறது.

வாஜ்பாய் ஆட்சியில் பிஎஸ்என்எல் முதலில் இதே போன்று  தனி கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டு, படிப்படியாக முடக்கப்பட்டது. பின்னர் ரிலையன்ஸ் அம்பானிக்கு மடை மாற்றம் செய்யப்பட்டிருக்கி றது. அதே போன்று இந்திய ராணுவ உற்பத்தி தள வாடங்களை  அம்பானி, அதானிக்கு மடை  மாற்றி டும் முயற்சியின் முதல் படிதான் கார்ப்பரேஷன் என்கிற கள்ளக்கூட்டு. ராணுவம், தொலைத் தொடர்பு, விமானம், துறைமுகம் என அனைத்தும் தனியார் என்றால் எதற்கு இங்கு அரசாங்கம்? 

;