headlines

img

போகாத ஊருக்கு வழி

கடந்த பல மாதங்களாக நூல் விலை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உயர்ந்து வருவதால், மொத்த ஜவுளித் தொழிலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் பல லட்சம் தொழி லாளர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில் ஒன்றிய அரசின் கவ னத்தை ஈர்ப்பதற்காக தமிழகத்தில் திருப்பூர் உள்பட பல்வேறு ஜவுளி மையங்களில் வேலை நிறுத்தம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங் கள் நடைபெற்றுள்ளன. தமிழக முதல்வரும் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந் நிலையில் கடந்த 17ஆம் தேதி தில்லியில் ஒன்றிய ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயல், நூல் விலை உயர்வு பிரச்சனை பற்றி விவாதிப்பதற்காக, ஜவு ளித் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.

தற்போது உயர்ந்துவரும் நூல் மற்றும் பஞ்சு விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக தலையிட வேண்டும், பஞ்சு, நூல்  ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், ஊக வணிக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் பருத்தி யைச் சேர்க்க வேண்டும், என்பது தொழில் துறை யினர் கோரிக்கை.

ஆனால் தொழில் துறையினர் தாங்களாகவே முன்வந்து நூல், பஞ்சு ஏற்றுமதியை குறைத்துக் கொள்வதன் மூலம் நூல் விலை குறையும், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் தொழில் துறையினர் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், அத்து டன் பருத்தி உற்பத்தியைப் பெருக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அவர்களிடம் அமைச்சர் கோயல் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்க முடியாது என்பதை அவர் சொல்லாமல்  சொல்லி இருக்கிறார். மேலும் ஒப்பந்த விவசாயம் செய்யச் சொல்வது, தில்லி விவசாயிகள் போராட் டத்தினால் கைவிடப்பட்ட வேளாண் சட்டத்தின் அம்சத்தை கொள்ளைப்புற வழியாக அமல் படுத்த முயற்சிப்பதாகும். 

வெளிநாட்டு பஞ்சு இறக்குமதிக்கு 11 சத விகித வரியை செப்டம்பர் 30 வரை நிறுத்தி வைப்ப தாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதில் ஒப்பந்தம் செய்யப்படும் இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு தரப்படும் என்பதுதான் அமைச்சர் காட்டியிருக்கும் தாராளம். 

இந்தியாவில் கடந்த பருத்தி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியில், சந்தைக்கு வராமல் 90 லட்சம் பேல் பஞ்சு தற்போதும் இடைத் தரகர்களிடம் சிக்கி இருக்கிறது. அதை மீட்பதற்கு வழி செய்யாமல், நூல் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. இதனைச் செய்யாமல் உற்பத்தியைப் பெருக்க உயர்மட்டக் குழு அமைப்பதாக அமைச்சர் சொல்வது அப்பட்டமான ஏமாற்று ஆகும். ஆக, தொழில் துறையினரின் எந்த வொரு கோரிக்கையையும் ஏற்காமல் போகாத ஊருக்கு வழி சொல்லியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்.

;