headlines

img

புதுவையில் பாஜகவின் சித்து விளையாட்டு....

புதுவை சட்டப் பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்தமூன்று பேர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் ஜனநாயக விரோத அணுகுமுறையாகும். புதுவை மாநில அரசை தன்னுடைய கைப்பாவை போல நடத்த பாஜக எடுத்துள்ள இழிவான நடவடிக்கையாகும் இது. 

யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளில் மாநிலஅரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உண்டு. ஆனால் கடந்த முறை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி பாஜகவைச் சேர்ந்த மூன்றுபேரை நியமன உறுப்பினர்களாக நியமித்தார். இவர்களுக்கு வாக்குரிமை உண்டா என்ற சட்டப்போராட்டம் நடைபெற்றது. அதிலும் கூட ஆளுநரும் மத்திய அரசும் அடாவடியான முடிவையேஎடுத்தனர். அந்த மூன்று நியமன உறுப்பினர்களைக் கொண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. 

தற்போது நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வர் பதவி வேண்டுமென பாஜக குடைச்சல் கொடுத்தது. இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் இணங்கவில்லை. துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்டு பாஜக நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.பாஜகவின் தயவில்தான் இந்த கூட்டணிஆட்சி நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியநிலையில் தற்போது மூன்று பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்திருப்பதன் மூலம்சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் ஒன்பதாக உயர்ந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸை விட ஒருஇடம் மட்டுமே பாஜகவுக்கு குறைவாக உள்ளது.எந்த நேரமும் என்.ஆர்.காங்கிரஸை கழற்றி விட்டு கட்சிமாறிகள் மூலம் ஆட்சி அமைக்கக்கூடிய ஆபத்தான திட்டத்துடன்தான் பாஜக இந்ததிருகுதாள வேலையைச் செய்துள்ளது. இது தேர்தலில்மக்கள் அளித்த தீர்ப்பையே கேலிக்கூத்தாக்குவதாகும்.

பல மாநிலங்களில் தேர்தல் மூலம் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் ஆள்பிடி அரசியல் மூலம் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. அத்தகைய ஒரு நாடகம் புதுவையிலும் அரங்கேறக்கூடிய அவலம் உள்ளது. என்.ரங்கசாமி முதல்வராக இருந்தாலும் அதிகாரத்தை பாஜகவே கையில் வைத்துக் கொள்ளக்கூடிய திட்டத்துடன்தான் இந்த வேலை செய்யப்பட்டுள்ளது. என்.ரங்கசாமி கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சித்து விளையாட்டை பாஜக நடத்தியுள்ளது.அண்மையில் தில்லி மாநில அரசின் அதிகாரங்களை முற்றாகப் பறித்து ஆளுநரின் கையில்தரக்கூடிய வகையில் மத்திய அரசு உத்தரவுபிறப்பித்தது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தையே உடைத்து துண்டாடியது. இந்த நிலையில் புதுவையிலும் பாஜக ஆரம்பித்துள்ள விளையாட்டு ஜனநாயகத்தை பெருமளவு சேதப்படுத்தும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

;