headlines

img

நவீன சூதாட்ட வடிவங்களை தடை செய்திடுக....

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. பணம்செலுத்தி விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

ஆன்லைனில் ரம்மி நடத்துபவர்கள், விளையாடுபவர்களை குற்றவாளிகளாக கருதி கைதுசெய்ய விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அனைத்து சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டுமென்று நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துதற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவலர்கள்உள்பட இந்த நவீன மோசடியில் சிக்கி கடனாளியாகி குடும்பத்தை நடத்த வழியின்றி மாண்டு போவது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும்.

ஆனால் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை நடத்துபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே இந்தசூதாட்டத்தை நடத்துவதாக தைரியமாக கூறுகின்றனர். அப்படியென்றால் இதை சட்டப்பூர்வமாக தடை செய்வது அவசியமாகிறது.தமிழகத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணம் வைத்து சூதாடியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். ட்ரோன் உள்ளிட்ட நவீன கருவிகளை கொண்டு இவர்களை விரட்டிப்பிடித்த சம்பவங்கள் கூட நடந்தன. ஆனால் மறுபுறத்தில் ஆன்லைன் எனும் நவீன வசதியைக் கொண்டு பலரையும் ஓட்டாண்டியாக்கி குடும்பங்களை நடுத் தெருவில் நிறுத்துகிற மோசடி பகிரங்கமாக நடந்து வருகிறது. 

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தானதாக ஆன்லைன் ரம்மி உள்ளது. செல்போன் இல்லாமல் அன்றாட இயக்கம் நடைபெறாது என்கிற அளவுக்கு நிலைமை மாற்றப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உள்பட ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதை பயன்படுத்தி செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை தொட்டாலே கவர்ச்சிகரமான முறையில் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் வலை விரிக்கின்றன. முதலில் விளையாட்டாக இதற்குள் நுழைபவர்கள், போதைப் பழக்கம் போல மீள முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர். எனவே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து சூதாட்டங்களும் ரத்து செய்யப்படுவது அவசர அவசிய தேவையாகும். இந்த விசயத்தில் தாமதிக்காமல் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். 
 

;