headlines

img

இது தான் இஸ்ரேல்....

66 குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உட்பட கடந்த பத்து நாட்களில் இஸ்ரேலின் கொத்துக் குண்டுகளுக்கு பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 243 பேர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தப்பட்டஇந்த கொடூர தாக்குதல்களில் உயிர்கள் பறிக்கப்பட்டது மட்டுமல்ல; பாலஸ்தீன குழந்தைகளின் புகலிடமாக இருக்கிற 51 கல்வி நிலையங்கள் முற்றாக தகர்க்கப்பட்டுள்ளன. ஆறுமருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படுகிற 58 பள்ளிகள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 66 ஆயிரம் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்திருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் ஈவிரக்கமற்ற ரத்த வெறியாட்டத்திற்கு இதை விட வேறு சாட்சியம் தேவையில்லை. அமெரிக்கா தவிர உலக நாடுகள் அனைத்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் இந்த வெறித்தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும் எதற்கும் அசைந்து கொடுக்காத இஸ்ரேலிய பெஞ்சமின் நேதன்யாகு அரசு காசா பகுதியின் அடிப்படைகட்டமைப்புகள் அனைத்தையும் குண்டு வீசி தகர்த்தது. 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் கணிசமான பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய பல பாலஸ்தீன குடும்பங்கள், ஜெருசலேம் மாநகரின் ஒரு பகுதியாக இருக்கும் ஷேக்ஜாரா மற்றும் சில்வான் ஆகிய பகுதிகளில் குடியேறினர். அங்கிருந்தும் அவர்களை பலவந்தமாக வெளியேற்றும் பொருட்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையொட்டியே காசா பகுதியின் அரசியல் இயக்கமான ஹமாஸ் அமைப்பு எதிர்வினையாற்றியது. அதற்கு பதிலடிஎன்ற பெயரில்தான் கடந்த சுமார் இரண்டு வாரகாலமாக இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. 

20 லட்சம் மக்கள் கொண்ட காசா பகுதி மீது இஸ்ரேல் தற்போது நடத்தியுள்ள தாக்குதல்களால் அம்மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காசாவின் 70 சதவீத இளைஞர்கள் எந்த வேலை வாய்ப்புமில்லாமல் தவித்து வருகிறார்கள். எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கிறார்கள். ஐ.நா.சபையின் உதவியின் பேரில் கல்வி, மருத்துவம், உணவு ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் காசாமக்கள் இருக்கிறார்கள். வெள்ளியன்று காலை உலகின் நிர்ப்பந்தத்தின் பேரில் சண்டை நிறுத்தம் செய்கிறோம் என்று பெயரளவுக்கு அறிவித்துக் கொண்டது இஸ்ரேல்.ஆனால் இதை கொண்டாடும் விதமாக அல் அக்சாமசூதியில் கூடிய பாலஸ்தீன மக்கள் மீது மீண்டும்குண்டு வீசி தாக்கியுள்ளது. கதியற்று நிற்கும் இந்தமக்களுக்கு கடைசியாக இருப்பது அவர்களதுசொந்த பூமியான காசா திட்டு மட்டுமே. அதை முற்றாக கபளீகரம் செய்தே தீருவது என்ற வேட்கையோடு இஸ்ரேல் தொடர்ந்து வரலாற்றுத் தவறுகளை இழைத்து வருகிறது. அதற்கு நிச்சயம் வரலாறு பதிலடி கொடுக்கும்.

;