headlines

img

நீட் -வரத.ராஜமாணிக்கம்

வீட்டுவாசலில் கூட்டம் அலை மோதியது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களின் கைகளில் இருந்த கேமி ராக்கள் விடாமல் மின்னிக் கொண்டிருந்தன. அரசியல் கட்சித் தலை வர்கள், அதிகாரிகள் மலர் வளையங்களுடன் மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சற்றே வாய்கோணிய நிலையில் அனு அமைதியாக படுத்து இருந்தாள். உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் இறுக கட்டப்பட்டு நீலம் படர்ந்த முகம் மட்டும் வெளித் தெரிந்தது. கூச்ச சுபாவம் உள்ள அனு, வீட்டு வாசலில் தான் இப்படி கிடத்தப் பட்டிருப்பதை அறிந்தால் எழுந்து வெட்கம் பிடுங்கித் திங்க வீட்டுக்குள் ஓடியிருப்பாள். வீட்டுக்கு முன்பு உள்ள வேப்ப மரத்திற்கு தினமும் மதிய வேளையில் வரும் ஒற்றைக் காக்கா சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது போல, விடாமல் கரைந்தது. ஒரு கோடை விடுமுறையில் தினமும் உணவிட்டு காக்காவைப் பழக்கப்படுத்தியவள் இந்த அனு தான். “அய்யோ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கே, மொத்த வீட்டுக்கும் ஒத்தப் பொண்ணு அனு எங்கள ஏமாத்த எப்படிடீ மனசு வந்துச்சு” என மாரில் அடித்துக்கொண்டு அனுவின் அத்தை வீறிட்டு அழுதாள்.

இன்னும் சிறிது நேரத்தில் அமரர் ஊர்தி வர இருக்கிறது.  அதற்கடுத்த சிறிது நேரத்தில் மின் மயானத்தில் அனு ஒரு பூவைப் போல பொசுங்கிப் போகவிருக்கிறாள். சிறிது நேரம் என்றால் அதற்கு கால அளவு என்ன? ஒரு வினாடியா... ஒரு மணித்துளியா... எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் அனுவுக்கு தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள? நேற்றைக்கு இதே பொழுதில் அனு உயிருடன் இருந்தாள்.  குட்டி போட்ட பூனையாய் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து சிரித்த அனுவின் அம்மா, “ரிசல்ட் வர்றப்ப வரட்டும் ஏன் பதட்டப்படுறே” என்றாள். ஆனால் அந்த ரிசல்ட்டே அனுவுக்கு எமனாகிப் போய்விடும் என அம்மா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அனுவை எடுத்துச் செல்ல ஊர்தி வந்துவிட்டது. அனுவின் அப்பா அவசரமாக வீட்டுக்குள் சென்றார். அனு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சான்றினை எடுத்து வந்தார். அதை அனுவின் தலைமாட்டில் வைத்தவர். “அனுவோட படிப்பும், கனவும் இதுல கலந்திருக்கு, இதையும் சேர்த்து அனுவோட எரிச்சிடுங்க உங்களுக்கு புண்ணியமா போகட்டும்” என அனைவரையும் பார்த்து கண் கலங்க கைகூப்பி வணங்கினார்.

;