மாநில உரிமை மீது மற்றுமொரு தாக்குதல்
ஒன்றிய-மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வித்துறையை ஒட்டு மொத்தமாக அபகரிக்க ஒன்றிய அரசு ஒவ்வொரு கட்டமாக காய் நகர்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதிதான் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கும் விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றமாகும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரச் சட்டம் 2018ல் பிரிவு 2, 3, 5இல் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க இனி மாநில அரசு அனுமதி தேவை யில்லை என்று மாற்றப்பட்டுள்ளது. இதுவரை சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக இருந்தது. ஆனால் அது தற்போது நீக்கப்பட்டு விட்டது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை என்பது அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கல்வியை முற்றிலும் தனி யாரிடம் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனியார் முதலாளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளை துவங்குவதற்கு சில குறைந்தபட்ச நிபந்தனைகள் மாநில அரசுகளால் விதிக்கப் பட்டிருந்தன. ஆனால் தற்போது எந்த வரைமுறை யும் இல்லாமல் மாநில அரசின் அனுமதியும் இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகளை துவக்கலாம் என்று அறிவித்திருப்பது ஆபத்தான ஒன்றாகும்
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுக்கிறது ஒன்றிய அரசு. புதிய கல்விக்கொள்கையை - அதன் வழியாக இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளாததால் ரூ.5 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறுகிறார்.
யுஜிசி விதிகளில் திருத்தம் செய்ததன் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை முற்றாக பறித்து துணைவேந்தர் நியமனம் என்பதை ஆளுநர் கையில் ஒப்படைக்கிறது ஒன்றிய அரசு. இப்போது சிபிஎஸ்இ பள்ளிகள் துவக்கவும் மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் கொல்லைப்புற வழியாக புதிய கல்விக்கொள்கையை திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது.
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. உயர்கல்வி துவங்கி துவக்கக் கல்வி வரை கபளீகரம் செய்ய ஒன்றிய அரசு துடிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதலாகும்.
3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று மாணவர்களை அச்சுறுத்துவதும், 8ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வியை கொண்டுவருவதும், கல்வி வளாகம் என்ற பெயரில் அருகமைப் பள்ளிகளை துடைத் தெறிவதும், அனைத்துக்கும் மேலாக தாய்மொழிக் கல்வியை தள்ளி வைத்து இந்தி மற்றும் சமஸ்கிரு தத்தை திணிக்க முயல்வதுமே மோடி அரசின் கல்விக் கொள்கை ஆகும். இந்த கல்விமறுப்பு கொள்கையை எதிர்க்காவிடில் எதிர்காலம் இருளடைந்துவிடும்.