headlines

img

கூட்டணி குறித்து மோடியின் கிலி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்


பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, எதிர்க்கட்சிகள் உத்தரப்பிரதேசத்திலும் பிற மாநிலங்களிலும் அமைத்துள்ள மகா கூட்டணிகள் குறித்து எரிச்சலடைந்து தாக்குதல் தொடுக்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகாகூட்டணியை, ‘மகா கலப்படம்’ என்றும், அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதிகள் என்றும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியதிலிருந்தே மோடியின் உரைகளில் இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணி, எப்படியெல்லாம் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும், இவ்வாறு அமைந்திடும் கூட்டணி அரசாங்கம் என்பது ஒரு பலவீனமான அரசாங்கம் என்றும், எனவே அதனால் நாட்டின் பாதுகாப்பைக் காத்திட முடியாது என்றும், தங்கள் தலைவர்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாகியுள்ள கொள்கையற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும் வசைபாடிக் கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியானது தன்னுடைய ஆட்சியை அகற்றிவிடும் என்கிற கிலி தன்னைப் பிடித்து ஆட்டுவதுதான் மோடியை இவ்வாறு கொந்தளிப்புடன் தொடர்ந்து பேசவைத்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் 1977க்குப்பின்பிலிருந்தே, ஒருசில விதிவிலக்குகள் தவிர, மற்ற சமயங்கள் அனைத்திலும் கூட்டணி அரசாங்கங்கள் ஆட்சி செய்து வந்தன என்பதுதான் நாட்டில் நடைமுறை நெறியாக இருந்து வந்திருக்கிறது. மோடி சித்தரித்துக் கொண்டிருப்பதற்கு முற்றிலும் முரணாக, கூட்டணி அரசாங்கங்கள் ஸ்திரமான அரசாங்கங்களாக அமைந்து ஆட்சி புரிந்து வந்திருக்கின்றன. அவை நாட்டிற்கு அளித்துள்ள “வளர்ச்சி” என்பதும், இதர அரசாங்கங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்ததில்லை. இரண்டு விதமான அரசாங்கங்களுமே முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்குள் இருந்துதான் செயல்பட்டு வந்திருக்கின்றன. உண்மையில், வாஜ்பாயி தலைமையில் 1999-2004இல் அமைந்திருந்த கூட்டணி அரசாங்கத்தை, பாஜக,“ஒளிரும் இந்தியாவின்” மாடல் என்று பீற்றிக்கொண்டிருந்தது.

மோடி கூறிவருவதற்கு முற்றிலும் மாறாக,. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்னர், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கிடையே ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்வதற்கில்லை. 2004 தேர்தலுக்குப்பின்னர் இதுபோன்றுதான் நடந்தது. அப்போது ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின்கீழ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமைந்தது. பாஜக-வின் அனுபவமும் இதுதான். 1998, 1999களில் தேர்தல் முடிந்தபின்னர் பாஜக ஒரு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்தது. பாஜக தன்னுடைய மூன்று வெறித்தனமான முக்கிய கொள்கைகளைக் கைவிட்டுதான் இந்தக் கூட்டணியை அமைத்தது. அதாவது, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தமாட்டோம், ராமர் கோவில் கட்டுவதைக் கோர மாட்டோம் மற்றும் ஒரே சீரான சிவில் நடைமுறைச் சட்டத்தைக் கோர மாட்டோம் என்று சொல்லித்தான் அக்கூட்டணியை அமைத்தது. இப்போது தாங்கள் இவ்வாறு அமைத்திட்ட கூட்டணி அரசாங்கத்தையே மோடி தற்போது கண்டனம் செய்துகொண்டும், கிண்டலடித்துக் கொண்டுமிருக்கிறார்.

அதேபோன்று கூட்டணி அரசாங்கங்கள் மாவோயிஸ்ட்டுகள் நடவடிக்கைகள் வளர்வதற்கு துணைபோகின்றன என்று குற்றஞ்சாட்டுவதும், அவற்றைத் தங்கள் அரசாங்கம் வந்தபிறகுதான் வலுவானமுறையில் அடக்கியது என்று கூறுவதும் அபத்தமேயாகும். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற தேர்தல் பிரச்சாரத்தின்போதே கூட, மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல் ஒன்றின் காரணமாக கத்சிரொலி மாவட்டத்தில் 15 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சட்டீஸ்கார் மாநிலத்தில் தண்டேவாடாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காரில் சென்ற, ஒரு பாஜக எம்எல்ஏ-யும், நான்கு பாதுகாப்புப்படை வீரர்களும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

 இந்த “கலப்படமற்ற” மோடி அரசாங்கம். எப்படியெல்லாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 2014க்கும் 2019க்கும் இடையே இவர் ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கை 109இலிருந்து 626ஆக அதிகரித்தது. கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 130இலிருந்து 483ஆக அதிகரித்திருக்கிறது.

எனவே இங்கே பிரச்சனை என்பது அமையும் அரசாங்கம் ஒரு தனிப்பட்ட கட்சியின் பெரும்பான்மையில் அமைந்த அரசாங்கமா அல்லது கூட்டணி அரசாங்கமா என்பதல்ல. அமைந்துள்ள அரசாங்கம் எவ்விதமான கொள்கைகளையும் திட்டங்களையும் பின்பற்றுகின்றன என்பதைப் பொறுத்ததேயாகும்.     

பெரும்பான்மையுடன் இருந்த இதே பாஜக அரசாங்கம்தான், மிகவும் கேடுகெட்ட பணமதிப்பிழப்புக் கொள்கையைத் திணித்தது. நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாகச் சீரழித்த இந்நடவடிக்கைகுறித்து ஆட்சியாளர்களில் எவருமே பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாராயில்லை.

மோடி பிரதானமாகத் தாக்குதல் தொடுப்பது உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருக்கிற சமாஜ்வாதிக் கட்சி – பகுஜன் சமாஜ் கட்சி – ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய மகா கூட்டணி குறித்துத்தான். ஏனெனில் இந்தக் கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு மரண அடி கொடுத்திடும் என்கிற அச்சம்தான் மோடியை இவ்வாறெல்லாம் கிலி பிடிக்க வைத்திருக்கிறது. இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி குறித்து தாக்குதல் தொடுத்திடும் மோடி, அதே சமயத்தில் தங்கள் கட்சி 40 இதர கட்சிகளுடன் கூட்டு வைத்துள்ள மகா கூட்டணியை மறந்துவிட்டார்.

தேர்தலுக்குப்பின் மத்தியில் அமையவிருக்கும் மதச்சார்பற்ற கூட்டணி அரசாங்கம் என்கிற பூதம்தான் மோடியை இவ்வாறெல்லாம் பேசுவதற்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகையதொரு அரசாங்கம், கூட்டணியில் அங்கம் வகிக்கவிருக்கும் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திடவிருக்கிறது. அத்தகையதொரு கூட்டணி தன்னுடைய ஆட்சியை அகற்றப் போகிறது என்கிற கிலிதான் மோடியை இவ்வாறெல்லாம் மிகவும் கொந்தளிப்புடன் பேச வைத்திருக்கிறது.

(மே 14, 2019) 

(தமிழில்: ச. வீரமணி)

  


;