headlines

img

தேர்தல் வரும் பின்னே; முழக்கம் வரும் முன்னே

  2024ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அதற்காக ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக இப்போதே தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டது. மூன்றாவது முறையும் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்ற முனைப்பில் அது புதிய புதிய உத்திகளை கையாளத் துவங்கிவிட்டது.  2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவதாக கூறியது இன்னும் நிறைவேற்றப்படவே இல்லை என்பதை கொஞ்சம் கூட கூச்சமின்றி மறந்துவிட்டு இப்போது ஒன்றரை வருடத்தில் பத்து லட்சம் பேருக்கு வேலை வழங்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.  தேர்தல் காலம் வந்தால் பாஜகவினர் ஏராளமான வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வழங்குவதற்கு சளைப்பதில்லை. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலையை வழங்குவோம் என்றெல்லாம் கூறினர். ஆனால் பின்பு ஒரு வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றமென்ற கட்டாயம் இல்லை என்று ஒன்றிய மூத்த அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி கூறி நாட்டு மக்களுக்கும் ‘பெப்பே’ காட்டினார்.  ஆனாலும் கூட நாட்டு மக்கள் இன்னும் நம்மை நம்புவார்கள் என்ற எண்ணத்திலேயே தற்போது இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார். ஒன்றிய அரசுத் துறைகளிலும் அமைச்சகங்களிலும் இந்த வேலைவாய்ப்பை தரப்போவதாகவும் பிரதமர் அலுவலக டிவிட்டர் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதும் அரசுத்துறை நிறுவனங்களை விற்பதும் ரயில்வேயில் ரயில்கள், தொழிற்சாலைகள், ரயில்நிலையங்கள் ஆகியவற்றை விற்பதும் என மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. அத்துடன் 42 ஆயுத தளவாட தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்த்திடும் ஏற்பாடுகளையும் செய்து விட்டது. இந்நிலையில் அரசுத்துறைகளிலும் ஒன்றிய அமைச்சகங்களிலும் தேர்தலுக்கு முந்தைய இந்த ஒன்றரை ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு வேலை வழங்குவது என்பது நம்பகத்தன்மையற்ற வெற்று முழக்கமே ஆகும். மோடி பிரதமராகும் முன்பிருந்தே ஒன்றிய அரசு துறைகளில் 7.75 லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. அவற்றை இந்த எட்டாண்டு காலத்தில் நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு இப்போது தேர்தலுக்காக இந்த வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதை நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலுக்கு தேர்தல் புதுப் புது முழக்கங்களை எழுப்பிவிட்டு பின்னர் அவற்றை நிறைவேற்றாமல் அப்படியே அந்தரத்தில் விட்டுவிடுவதும் ஆர்எஸ்எஸ்சின் கைப்பாவையான பாஜகவின் வாடிக்கை. எனவே இந்த அறிவிப்பால் பாஜகவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பலன் இந்தமுறை கிடைக்காது என்பது உறுதி.

;