headlines

img

வரவேற்கத்தக்க நடவடிக்கை....

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசைப் புறக்கணித்து நேரடியாக மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.  இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒன்று என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது. 

மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தெளிவான முடிவு எதுவும் எடுக்காமல் கிட்டத்தட்ட அந்தக் கொள்கைகளை ஏற்று செயல்படுத்திய அதிமுக அரசை தமிழக மக்கள் நிராகரித்தனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று சொன்ன திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வாக்குறுதிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் திமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று கூறியிருந்தார். பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் எழுதிய கடிதத்தில்கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு பதிலாக மாநில கல்வி அமைச்சர் களுடன் ஆலோசனை நடத்தினால் மாநில அரசின் கருத்தை நேரடியாக தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை. மாறாக ஆணவத்துடன் மாநில கல்வித்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க முடியாது என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுதெளிவுபடுத்தியிருந்தது. முன்பு அதிமுக ஆட்சியில் இதேபோன்று மாநில கல்வித்துறை செயலாளர்கள் கூட்டத்தை நேரடியாக மத்திய அரசு நடத்திய போது அதில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆனால் தற்போது மாநில கல்வி அமைச்சர்களை புறக்கணித்து செயலாளர்கள் அளவில் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படவில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்கவில்லை. தானடித்த மூப்பாக அந்தக் கொள்கையை நிறைவேற்றியதோடு நடைமுறைப்படுத்து வதிலும் மோடி அரசு முனைப்பாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாகவும், பெரும் பகுதிமக்களுக்கு கல்வியை மறுப்பதாகவும், கல்வித்துறையை காவி மற்றும் கார்ப்பரேட்மயமாக்கும் முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை நிராகரிக்கும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் போர்க்கொடி உயர்த்துவதே சரியான நடவடிக்கையாகும்.

;