headlines

img

தமிழகம் பதித்த தனித்த முத்திரை

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை தனித்த முத்திரையை பதித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மதுரை, கோவை நாடாளுமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும், நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளது தனித்த கவனம் பெறத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய ஆளும் கட்சியான பாஜகவிற்கும் மாநில ஆளும் கட்சியான அதிமுகவிற்கும் எதிராக மக்களின் கோபாவேசபேரலை சுழன்றடித்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியும் இதை உறுதி செய்கிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத்தை அனைத்து வகையிலும் வஞ்சித்த மோடி அரசிற்கு தமிழக மக்கள் தங்களதுவாக்குரிமை மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். தமிழக வாக்காளர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.

அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிகஇடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாத நிலை பாஜக கூட்டணிக்குபெருமளவு உதவியுள்ளது. மேலும் தேர்தல் பரப்புரையில் மோடி, அமித்ஷா வகையறா திசைதிருப்பும்வேலையிலேயே ஈடுபட்டனர். அனைத்து வகையிலும், அனைத்து துறையிலும் தோல்வியடைந்த மோடி அரசு குறுகிய தேசிய இனவெறி, மதவெறி மற்றும் சாதி வெறியை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருந்தனர். சாதனைகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில் மக்களிடையே வெறுப்பரசியலை விசிறி விட்டனர்.கடந்த ஐந்தாண்டு காலத்தில் மத்தியிலிருந்து ஆட்சி பின்பற்றிய கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மதவெறி அரசியல் மேலும் தீவிரமாகக் கூடும். ஒன்றுபட்ட மக்களின் போராட்டத்தின் மூலமே இதை எதிர்கொள்ள முடியும். 

அகில இந்திய அளவில் இடதுசாரிக் கட்சிகளுக்கு பின்னடைவை தருவதாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதை நிதானமாக மதிப்பீடு செய்து, தேவையான படிப்பினைகள் பெற்று, அனுபவங்களை அடியுரமாக்கி பின்னடைவிலிருந்து மீள்வதையே வழக்கமாக கொண்டவர்கள். இந்த தேர்தல் தோல்வியிலிருந்தும் படிப்பினைகள் பெற்றுமுன்னேறுவார்கள். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் மக்களிடம் சென்று, அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மேலும்மேலும் அவர்களுக்காக உழைக்கவும், பாசிச சக்திகளிடமிருந்து தேசத்தை பாதுகாக்கவும் தங்கள் செயல்பாட்டை போராட்டத்தை தொடர்வார்கள். ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை என தமிழகத்தை மேலும் மேலும் ஆபத்து சூழும் இந்த வேளையில் தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடிய தமிழக மதச்சார்பற்ற சக்திகள்ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து போராட்டக் களத்திலும் நிற்பார்கள் என்பது உறுதி. மக்கள் மனங்களை  மேலும் வெல்வார்கள் என்பதும் உறுதி.

 

 

;