headlines

img

திட்டம் பாராட்டுக்குரியதுதான்....

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தபடி திங்களன்றுமுதல் கட்டமாக சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார். 

இந்த மினி கிளினிக்குகள் திட்டம் உண்மையில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையிலான நல்ல திட்டமே. இதனை இன்னும் அதிகரிக்க வேண்டியதும் அவசியமே. ஆயினும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களை மருத்துவரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் மேம்படுத்துவது மிக மிக அவசியம். திட்டத்தை துவங்கி வைத்து முதல்வர் பேசும்போது பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டுவதாக கூறி பெருமைப்பட்டுள்ளார்.  ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதுதான் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாகும். 

முதல்வர் அறிவித்த நடமாடும் மருத்துவ மனை திட்டம் ஏற்கெனவே தமிழக அரசின் நடமாடும் மருந்தகங்கள் என்ற திட்டத்தின் புதியவடிவமாகவே தெரிகிறது. முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது முதல்வர் ஜெயலலிதாவால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க செய்வதற்காக துவக்கப்பட்டதே நடமாடும் மருந்தகங்கள் திட்டம்.ஆனாலும் இந்த நடமாடும் மருத்துவமனை திட்டம் முதல்வரின் மூளையில் உதித்த திட்டம்என்று சுகாதார அமைச்சர் புகழாரம் சூட்டுவதும், முதல்வரை  பில்டப் செய்வதும், அவர்களதுகட்சியில் முதல்வர் வேட்பாளர் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்களின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சுகாதாரத்துறையை பலப்படுத்தும் நடவடிக்கையே மக்களின் பாராட்டைப் பெற்றுத்தரும். 

தமிழகத்தில் தற்போது உள்ள கிராமப்புற  ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1384, நகர்ப்புற சுகாதார மையங்கள் 460 ஆகியவற்றில் போதியமருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிறையவே உள்ளது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 துணை சுகாதார மையங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒரு மருத்துவ அதிகாரி, செவிலியர் உள்ளிட்ட 14 துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் தேவை. ஆனால்தற்போது அவற்றில் போதிய அளவு மருத்துவர்கள், ஊழியர்கள் இல்லை என்பது எதார்த்த நிலைமை. அத்துடன் இப்போது துவக்கப்பட்டிருக்கும் மினி கிளிக்குகள் திட்டத்திற்கும் புதியமருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் புதிதாக  நியமனம் செய்யப்படவில்லை. 
ஏற்கெனவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் அவர்களையே இந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்துவது மேலும் பற்றாக்குறையை அதிகரித்து மருத்துவ வசதியை ஏழை, எளிய மக்கள்பெறுவதற்கு இடையூறாகவே அமையும். எனவேபுதிய திட்டத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படுவது அவசியம். இல்லாவிடில் இது வெறும் தேர்தல் கால திட்டமாகி பின்னாளில் தொடராமல் போகும் நிலையே ஏற்படும்.

;