headlines

img

கல்வித்துறை காக்கப்பட வேண்டும்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும்கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புஅரசுக்கும், கல்வித்துறைக்கும் உள்ளது. அதுமட்டுமின்றி, கடுமையான வெப்பம் நிலவுகிற நிலையில் பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட இடங்களில் போதிய தண்ணீர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாகவே தனியார் கல்விநிலையங்களுக்கு ஆதரவான அணுகுமுறையையே மாநில அரசு பின்பற்றி வருகிறது. இதன்காரணமாக அரசுப்பள்ளிகள் திட்டமிட்டு நலிவடையச் செய்யப்படுகின்றன.   அரசுப்பள்ளிகளைபாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம்நடத்திய சைக்கிள் பயணம் மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று.

கல்வி என்பது ஒரு லாபம் கொழிக்கும் துறையாக மாற்றப்பட்டிருப்பதால் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதில் முதலீடு செய்கின்றனர். தனியார் பள்ளி முதலாளிகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து அரசு வகுத்துள்ள விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்படுவதற்கு அரசே துணை நிற்கிறது.மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆய்வுக்கு வராத 200 பள்ளி வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கணக்கு எடுத்தால் ஆயிரக்கணக்கான பள்ளி வாகனங்கள் முறையான சோதனைக்கு வராமல் ஓடிக்கொண்டிருப்பதை கண்டறியமுடியும். பல்வேறு விபத்துக்கள் மூலம் கிடைத்ததற்கரிய செல்வங்களான குழந்தைகளை பலிகொடுத்தபோதும் ஓட்டை உடைசல் வாகனங்கள்தொடர்ந்து ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.

மறுபுறத்தில் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கான போலி சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசும் அவ்வப்போது அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த கல்வி நிலையங்களை இழுத்து மூடவோ, மாணவர் சேர்க்கையை தடுக்கவோ, அரசுஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவது பற்றி அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. இதனால்தான் புற்றீசல்கள் போல போலிகல்வி நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே யிருக்கின்றன.அரசுப்பள்ளிகளை பாதுகாப்பதும், தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகும். அங்கீகாரமற்ற பள்ளிகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதைஉறுதி செய்ய வேண்டும். கல்வித்துறையை அலட்சியப்படுத்தும் அரசு ஒரு தலைமுறையையேபலி கொடுக்கிறது என்று பொருள்.

;