headlines

img

விசாரணை தேவை!

இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மைக்காலமாக முழங்கி வருகிறார். ஆனால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுவதே ஜனநாயகம் என்றே செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் முன்பு எந்தப் பிரச்சனையையும் விவாதிக்க தயார் என்று பிரதமரும் அமைச்சர்களும் வாடிக்கை யாகக் கூறுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்சனைகள் பற்றி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கிறார் சபாநாயகர். இதுதான் பாஜக- ஆர்எஸ்எஸ்-சின் ‘ஜனநாயக’ பாணி- அதாவது பாசிச பாணி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விஷயத்தையொட்டிய கேள்வி நேரத்தின் போது, நாட்டின் பொருளா தார வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் நடந்துள்ள கவுதம் அதானியின் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குச் சந்தை மோசடி முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஆனால் சபாநாயகரோ, மிகவும் முக்கியமான கேள்வி நேரத்தின்போது இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறி அனுமதி மறுத்து விட்டார். அத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கள் குறித்து அவையில் பிரச்சனை எழுப்ப வேண்டாம் என்றும் கூறி அவையை ஒத்தி வைத்து விட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அதன் தலைவர், அனுமதி தர மறுத்து அவையை ஒத்தி வைத்துவிட்டார். இதனால் வியாழனன்று நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. மறுநாள் வெள்ளியன்றும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

எல்ஐசி, எஸ்பிஐ-யில் உள்ள மக்களின் வாழ்நாள் சேமிப்பை சூறையாடும் அதானி நிறு வனங்களின் ஊழலையும் பங்குச் சந்தையை தனக்குச் சாதகமாக வளைக்க சூழ்ச்சி செய்ததை யும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய விடாமல் தடுப்பது மோடி அரசாங்கம் தனது கூட்டுக் கொள்ளை முதலாளிகளை பாதுகாக்கி றது என்பதையே மீண்டும் நிரூபிக்கிறது.

எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் உள்ள ஏழை மக்களின் பணம் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை விட முக்கியமான பிரச்சனை, நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க வேறெதும் தேவையா? எனவே இந்தப் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடிப் பார்வையின் கீழ் உயர் மட்ட விசாரணை நடத்துவதுதான் முழு உண்மை வெளிவரவும் நாட்டு மக்களின் பணம் பாதுகாக்கப்படவும் அவசியமானது. அதை விடுத்து எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க அவைகளை ஒத்தி வைப்பது சரியல்ல. ஜனநாயகத்தின் தாய் என்று வீண் பெருமை பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல.

;