headlines

img

கறை படிந்த மேலும் ஒரு நாள்...

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச்  சொந்தமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியதீர்ப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றால்பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும், நீதி வழங்கும் முறை மீதுபல்வேறு கேள்விகளையும் எழுப்புவதாகஅமைந்துள்ளது. 

மத்திய புலனாய்வுக் கழகம் எந்தளவுக்கு அலட்சியத்துடன் இந்த வழக்கை திட்டமிட்டு நீதி கிடைக்கவிடாமல் செய்யும் வகையில் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளது என்பதுதெளிவாகத் தெரிகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் என்று அப்போது உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் சர்வ சாதாரணமாக விடுவித்திருப்பதோடு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி, பஜ்ரங்தள தலைவர்கள் மசூதியை இடிக்க துணைபோகவில்லை. மாறாக இடிப்பை தடுக்க முயன்றனர் என்று நற்சான்றிதழ் வழங்கியிருப்பது கொடூரமான முரணாகும்.

இந்த வழக்கை நடத்துவதில் மத்திய புலனாய்வுக் கழகம் உரிய அக்கறை செலுத்தவில்லை. விசாரணையை துரிதப்படுத்தி முடிப்பதில் சிறப்பு நீதிமன்றமும் கவனம் கொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் கெடு விதித்தபிறகு தான் வேறு வழியின்றி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர்கோவில் இருந்தது என்று சங் பரிவாரம் தொடர்ந்துபுனை கதைகளை உருவாக்கி உலவ விட்டது. ஆனால் இதற்கு எந்த நிரூபணமும் இல்லை. அவ்வப்போது இருந்த மத்திய மற்றும் உ.பி. ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனையில் சமரசமான போக்கை கடைப்பிடித்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்றநோக்கத்துடனும் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்துடனும்தான் எல்.கே.அத்வானி ரதயாத்திரையை நடத்தினார். 

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவை என்ற பெயரில் திட்டமிட்டு கூட்டம் சேர்க்கப்பட்டது. உச்சநீதிமன்றம், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் ஆகியவற்றுக்கு அளித்தவாக்குறுதிக்கு மாறாக உ.பி. அரசின் துணையுடன் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து கட்டுமான பணியும் துவங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து அவர்கள் இடிப்பை தடுக்க முயன்றதாக நற்சான்றிதழும் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் உற்று கவனித்த ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளைப் போன்றே கறை படிந்த நாளாகவேநாளைய வரலாறு பேசும்.
 

;