headlines

img

தமிழ்நாட்டை துண்டாட சதி வலை பின்னுவதா?

விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து இந்தியக் குடியரசு உருவாக்கப்பட்ட போது, மாநிலங்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. மொழிவழியில்தான் மாநிலங்கள்  அமைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டுகள் வலுவாக வாதாடினர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சி அமைப்பைக் கூட மொழிவழியில் அமைத்திருந்த நிலையில், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் விசயத்தில் தடுமாறியது.

எனினும், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பண்பாட்டைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், மொழிவழி மாநிலங்கள் அமைவதே சிறந்த தீர்வு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன்படியே அமைக்கப்பட்டன. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மொழிவழி மாநிலங்கள் அமைப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது. அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்பதே அதனுடைய கருத்தோட்டமாக இருந்தது.முன்பு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மாநிலங்கள் துண்டாடப்பட்டு சிறிய சிறிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மோடி அரசு வந்தபிறகு, மாநிலங்களை சிதைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசம், தில்லி யூனியன் பிரதேசம், லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பாஜக தன்னுடைய குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் தமிழகத்தை துண்டாடவும் இந்துத்துவா சக்திகள் துணிந்துவிட்டன. இந்திய மக்களை பல்வேறு மத, ஜாதி, இன அடிப்படையிலான குழுக்களாக துண்டாடி, பகைமையை தூண்டிவிட்டு பிரித்தாள்வதன் மூலம் தன்னுடைய பேரரசுக் கனவை நிறைவேற்ற சதி வலைகளை பின்னுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறது. இது எந்த வகையிலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கோ, அரசியல் சட்டத்திற்கோ எதிரானது அல்ல. இன்னும் சொல்லப்போனால்,  நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது; அதே நேரத்தில், மாநிலங்களின் தனித்தன்மையை வலியுறுத்துவது. இதை சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினர், ஏட்டிக்குப் போட்டியாக கொங்கு பகுதியை பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற இருப்பதாக பிளவுவாத சக்திகள் பேசத் துவங்கியுள்ளன. பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசனும் இதற்கு ஒத்திசைவாக சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார். இது ஆபத்தான போக்கு. தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க முன் வரவேண்டும். இந்த சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

;