headlines

img

நாடு ஒப்பன செய்!

இந்தியாவின் பல்லுயிர் தன்மை ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் சிறப்பான சொத்து என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் பல்வேறு உயிரினங்களைப் பட்டியலிட்டுள்ள அவர், பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவுக்கு 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருகின்றன என்றும் கூறியுள்ளார்.  மேலும் அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள பல்லுயிர் தன்மை குறித்து நாம் அறிந்தது கொஞ்சம்தான், அறிய வேண்டியது அதிகம் என்று கூறி ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசயத்தில் பிரதமர் கூறியுள்ளது உண்மைதான். ஆனால் கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக பின்பற்றப்படும் கொள்கை களால் இந்தியாவின் சுற்றுச்சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், எட்டு வழிச்சாலை மட்டுமின்றி வகை தொகையின்றி அனுமதிக்கப்படும் ஆபத்தான தொழிற்சாலைகளால் மனித வாழ்வே கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இயற்கை சமநிலையும், பல்லுயிர் பெருக்கமும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதுகுறித்தும் பிரதமர் மோடி இணைத்துப் பேசி யிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

இந்தியாவில் தண்ணீர் முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளவின்றி தரப் படுவதால் முதலில் பலியாவது இயற்கையும், அது சார்ந்து வாழும் பல்லுயிர்களும்தான்.  இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் பெருமை பல்லுயிர் பெருக்கம் மட்டுமல்ல; பன்முகத் தன்மையும்தான். இந்தியாவுக்கு வரும் பறவை கள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. அதில் குறிப்பிட்ட பறவைகள் தான் வரலாம், மற்றவை வரக்கூடாது என்றெல்லாம் இயற்கை பேதம் பார்ப்பதில்லை. 

மனிதர்கள் புலம் பெயர்வதற்கு இதை அப்படியே பொருத்திவிட முடியாது என்றாலும் பிறக்கிற போது மதமின்றி பிறக்கிற மனிதர்களை மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துவதும், அந்நியப்படுத்துவதும் நியாயம்தானா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல  வேண்டும். இப்படி மனிதர்களிடையே பேதம் பார்ப்பது சமூக நீதிக்கு மட்டுமல்ல, இயற்கை நீதிக்கும் எதிரானது. 

மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவின் பன்முகத்தன்மை க்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் திட்டங்களான ஒரே மொழி, ஒரே மதம் என்ப தெல்லாம் இந்தியா காலம் காலமாக பின்பற்றி வரும் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பற்ற அரசியல் சாசனத்திற்கும் எதிரானவை. 

பிரதமர் மோடிக்கு அவ்வையின் ஆத்திச் சூடியிலிருந்து பலவற்றைச் சொல்ல முடியும்; நாடு ஒப்பன செய், பிழை பட சொல்லேல், ஊருடன் கூடி வாழ், தொன்மை மறவேல்.

;