headlines

img

இன்னுமா நம்புவார்கள்?

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு  ஒரு சிலரை மட்டும் பற்றியதோ சில ஆண்டுகள் தொடர்புடையதோ அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் திங்களன்று சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீத்தாராமராஜூவின் சிலையை திறந்து வைத்து பேசியுள்ளார். அத்துடன் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பற்றிய வரலாறு என்றும் எல்லைப்பகுதிகளையும் சேர்ந்தவர்களின் தியாகம் தொடர்புடைய வரலாறு என்றும் கூறியுள்ளார்.

உண்மைதான். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தில் பாஜகவின் முன்னோடிகளான ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா ஆகியவற்றின் பங்களிப்பு என்ன? பாஜகவின் அரசியல் முன்னோடியான ஜனசங்கத்தின் நிலை என்ன?  

ஆண்டுகளை பற்றி குறிப்பிட்டால் இவர்க ளது கட்சியின் மூத்த தலைவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் செய்த துரோகச் செயல்கள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும் என்பதால் தான் ஆண்டுகள் பற்றியது அல்ல என்கிறாரோ? 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுத்தவர் தானே அடல் பிகாரி வாஜ்பாய்.

ஆனால் அல்லூரி சீத்தாராமராஜூ போன்ற அப்பழுக்கற்ற தீரர்களை புகழ்வதன் மூலம் தங்கள் மீது படிந்திருக்கும் கறைகளை கழுவிவிட முயற்சி  செய்கிறார் மோடி. ஆனாலும் கூட அவர்களின் இந்துத்துவ செயல்பாடுகளை நியாயப்படுத்தும் விதத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான அல்லூரி சீத்தாராமராஜூவை ஒரே தேசம், சிறந்த தேசம் என்பதன் அடையாளமாக விளங்கினார் என்று அவர் மீது திணிக்கவும் செய்துள்ளார்.

அவரது வாழ்க்கை ஆதிவாசிகளின் உரிமை களுக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறிய பிரதமர் மோடி யின் அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி மலைவாழ் மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கும் வன உரிமையை காவு வாங்கும் காரியத்தை அல்லவா செய்து வந்தி ருக்கிறது. ஆனாலும் கூட துணிச்சலாக ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே தனது அரசு பாடு படுவது போல பேசியிருக்கிறார்.

பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்களை  சர்வதேச சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதோடு மட்டுமின்றி, வனப்பகுதி களில் விளைந்து வரும் மூங்கில்களை வெட்டி உபயோகிக்கும் உரிமையை ஆதிவாசிகளுக்கு வழங்கிடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் கூறியிருக்கிறார்.

இவர் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிக ளையெல்லாம் நிறைவேற்றி முடித்துவிட்டவர் போல பேசியிருப்பதை கண்டு நகைக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் கூட நம்மை இந்த மக்கள் நம்புவார்கள் என்றெண்ணியே அவர் இவ்வாறு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமின்றி பேசுவது தான் ஆச்சரியம். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் பேச்சையும், வாக்குறுதியையும் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இந்த எட்டாண்டு காலத்தில் ஏராளமாக பார்த்து விட்டார்கள்.

;