headlines

img

கொரானா வைரஸ்: சமூக முடக்கம் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? - - லு யுவான் ஷி

இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாள் அன்று தலைநகர் புதுதில்லியில், போலீஸ்காரர் சாலையில் எவரையும் செல்லாது பார்த்துக்கொண்டிருக்கும் படம் தான் மேலே இருப்பது. இதன் மூலம் சுமார் 130 கோடி மக்கள்தொகை (உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை) கொண்ட ஒரு நாட்டில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கக் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். கொரானா வைரஸ் தொற்றை எப்படி வலுவான முறையில் கட்டுப்படுத்துவது என்பது குறித்து, சீன மக்கள், தங்களின் அரசாங்கம் அளித்திட்ட அறிவுரைகளைப் பின்பற்றி, இந்தியா உட்பட உலகத்திற்கே ஒரு பாடமாக அமைந்திருக்கிறார்கள். கொரானா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு இது ஒன்றே வழி என்று மார்ச் 24 அன்று நள்ளிரவு முதல் 21 நாள் தேசிய அளவிலான சமூக முடக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அப்போது அவர் மக்கள் அனைவரும் மூன்று வார காலங்களுக்கு வீட்டிற்குள்ளேயே தங்கி இருக்க வேண்டும் என்றும், இதை மீறினால் நாடு 21 ஆண்டுகள் பின்னுக்குச் சென்றுவிடும் என்றும் குடும்பங்கள் அழிந்துவிடும் என்றும் கூறினார். இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின்படி, (மார்ச் 29)ஞாயிறு அன்று 867 பேர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும், 25 பேர் மரணம் அடைந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இத்தாலியைவிட மிகமிகக் குறைவுதான். இந்த நிலையில் பிரதமர் மோடி ஏன் இப்படி அவசரப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்தார்? இந்தியாவில் 900 அளவிற்குச் சற்றுக் குறைவான அளவிலேயே பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், உண்மையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும்  சோதித்துப் பார்க்கக்கூடிய அளவிற்கு கட்டமைப்பு வசதிகளோ, வள ஆதாரங்களோ அரசிடம் இல்லை.

இந்தத் தொற்று உலகம் முழுதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் இந்தியா மட்டும் அதிலிருந்து தடைகாப்புறுதிப் பெற்றுவிட முடியாது. மோடியின் உத்தரவு, இதற்கு உதவுக்கூடும். ஆனால் அதற்கு மக்களின் விருப்பத்துடன் கூடிய ஒத்துழைப்பு தேவை. கொரானோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திட மிகவும் வலுவான வழி, மக்கள் கடுமையான முறையில் தங்களைத் தனிமைப்படுத்தி க்கொண்டிருப்பதன் மூலம்தான் சாத்தியம். சீனாவிடமிருந்து இந்தப் பாடத்தை இந்தியா கற்றிருப்பது போன்று தோன்றுகிறது. இந்தியா, ஒரு ஜனநாயக அமைப்பு கொண்ட நாடு. ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளை அமல்படுத்த முயலும்போது, சில சமயங்களில் அது குறித்துக் கேள்விகளும் மற்றும் அரசாங்க ஆணைகளுக்கு எதிராக எதிர்ப்புகளும் கிளம்பும். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், சீனா போன்று அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கக்கூடிய விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த மக்கள் நல அமைப்பு இந்தியாவில் இல்லாமலிருப்பதுதான்.

இந்திய மக்கள் அனைவரின் நடமாட்டங் களையும் அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். இந்தியர்கள் அனைவரும் அரசாங்கத்தின் உத்தரவுகளைக் கறாராகப் பின்பற்றுகிறார்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கொரானோ வைரஸ் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து மக்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டிருக்காவிட்டால், அவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளை உதாசீனம் செய்யக்கூடும். உண்மையிலேயே 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் 900 பேர்தான் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் எனில், அது கடுமையிலிருந்து மிகவும் குறைவுதான். இது மக்களை,  தனிமைப்படுத்திக்கொள்ள  வேண்டும் என்கிற அரசின் உத்தரவை ஆழமாக எடுத்துக்கொள்வதிலிருந்து முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடும். உலகம் முழுவதுமே இந்த நோய் பரவுவதை வலுவாகக் கட்டுப்படுத்தும் வரையிலும், மக்கள் இதன் ஆபத்தையும், அச்சுறுத்தலையும் ஆழமான முறையில் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து வந்திருப்பதைப் பார்க்கிறோம்.

இந்தியா போன்று, மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் ஒரு நாட்டில், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கக்கூடிய ஒரு நாட்டில், கொரானோ வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மக்களின் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் மேற்கொள்ளாவிட்டால், அரசாங்கம் இதில் தோல்வியடைந்துவிடும். இதன் விளைவுகள் எதிர்பாராததாக இருக்கும். (2 கோடியே 20 லட்சம் மக்கள்தொகைகொண்ட) மும்பை மற்றும் (3 கோடி மக்கள்தொகை கொண்ட) புது தில்லி ஆகிய பெருநகரங்களில் கட்டாயத்தின்பேரில் மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால், ஒரு விரிவான அளவில் இந்நோயின் தாக்குதல் ஏற்படக்கூடும். இது மோடி அரசாங்கத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும். எனினும், கடும் முடக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதும் மாபெரும் அடியாக அமைந்திடும். உற்பத்தி மூடல் விளைவாக ஏற்படும் பொருளாதாரத்தின் பாதிப்பு, எவ்விதமான தேசியப் பேரிடரையும் விட அதிகமாக இருக்கும். இது, மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதிலும் அதிக சிரமத்தை ஏற்படுத்திடும்.

இதன் காரணமாக இந்நோய் மேலும் கடுமையான முறையில் பரவுவதற்கான ஆபத்தைக் கொண்டுவரும்.  மோடி நிர்வாகம் ஒரு சிக்கலான நிலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எண்ணற்ற ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே 100 கோடிக்கும் மேலான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடுகளாகும். இரண்டுமே வளர்முக நாடுகளுமாகும். சீனா, கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை, நாட்டின் வள ஆதாரங்களை விரைவாக அணிதிரட்டி, காலத்தே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, ஆழமான முறையில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தி, வெற்றிகரமாக முறியடித்திருப்பது, இந்தியாவும், இதர நாடுகளும் ஆழ்ந்து கற்க வேண்டிய படிப்பினைகளாகும். (இந்தக் கட்டுரை, குளோபல் டைம்ஸ் செய்தியாளரான, லு யுவான் ஷி என்பவரால், ஷாங்காய் சர்வதேச ஆய்வுமையத்தின், ஆராய்ச்சி   மாணவர் ஷாவோ காங்செங் என்பவரை நேர்காணல் கண்டு தொகுக்கப்பட்டது.

அவரது மின்னஞ்சல் முகவரி: luyuanzhi@globaltimes.com.on)

தமிழில்: ச.வீரமணி

;