headlines

img

ஜார்க்கண்ட் வழங்கிய தெளிவான தீர்ப்பு

ஜார்க்கண்டிலும் மண்ணைக் கவ்வியுள்ளது பாஜக. ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தியும், தங்களது வழக்கமான சித்து வேலைகள் அனைத்தையும் செய்து காட்டியும் கூட அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியாமல் பின்னடைவைச் சந்தித்த பாஜகவை ஜார்க்கண்ட் மக்கள் தீர்மானகரமாக நிராகரித்துள் ளனர். பாஜகவைச் சேர்ந்த முதல்வராக இருந்த ரகுபர்தாஸ் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் பரிதாப மாக தோற்றிருக்கிறார்.

ஜார்க்கண்ட் தோல்வியின் மூலம் ஒரே ஆண்டில் ஐந்து மாநிலங்களை இழந்துள்ளது பாஜக. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ராஜஸ் தான்,சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிர தேசம் என தொடர் தோல்விகளை சந்தித்த பாஜக தற்போது ஜார்க்கண்டையும் இழந்துள்ளது.

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜார்க்கண்ட்டை சுற்றி சுற்றி வந்ததோடு, தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருத்தியது தங்கள் சாதனை என்றும் இதற்கு ஜார்க்கண்ட் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என்பதை தேசத்தோடு ஜார்க்கண்ட் மக்களும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. பாசிச பாணி பாஜகவை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமை தேவைப்படுகிறது என்பதை ஜார்க் கண்ட் தீர்ப்பும் தெளிவாகக் காட்டியுள்ளது.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள் ளது. ஜார்க்கண்ட்டில் நடந்துவந்த காட்டாட்சி க்கு எதிரான தீர்ப்பாக மட்டுமன்றி மத்திய பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தின் குறியீடாகவும் இந்த தீர்ப்பு அமைந் துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக கார்ப்ப ரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பதிலேயே மோடி அரசு குறியாக உள்ளதோடு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை வெகு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்களாவர். ஜார்க்கண்ட் அரசு பழங்குடி மக்களின் நிலங்களை பழங்குடி அல்லாதவர் வாங்கக்கூடாது என்று இருந்த சட்ட நடைமுறைகளை மாற்றி அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பழங்குடி மக்களின் நிலங்களை பறித்து வழங்கியது. இதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த கோபமும் ஜார்க்கண்ட் பாஜக அரசை வீழ்த்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து அம்பானி, அதானிகளை வாழ வைக்கும் மோடி அரசுக்கும் இந்தக் கதிதான் ஏற்படும்.

;