headlines

img

குடியுரிமை திருத்தச் சட்டம் : ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கொடிய சூழ்ச்சித் திட்டம்

2019 குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவு, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளே யும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ள போதிலும் அவற்றை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இச்சட்ட முன்வடிவு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமானதாகும். இதன் ஷரத்துக்கள், அரசமைப்புச் சட்டம் குடியுரிமை தொடர்பாக வகுத்துத்தந்துள்ள மதச்சார் பற்ற கருத்தாக்கத்தை அரித்து வீழ்த்துகின்றன. அரச மைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு, இந்தியாவின் எல்லைக் குள் எவரொருவருக்கும் சட்டத்தின் முன்பு அல்லது சட்டத்தின்கீழ் சம அளவில் பாதுகாப்பு அளிப்பதற்கு மறுக்கக்கூடாது என்கிறது. மேலும் அரசமைப்புச்சட்டமா னது, மதம், சாதி, இனம்  அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கும் தடை விதிக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு அறிமுகப் படுத்தியிருப்பது என்னவெனில், நாட்டில் குடியுரிமை வழங்கு வதற்கு ஒருசில பிரிவினருக்கு மதத்தை வரன்முறையாகக் கொண்டிருக்கிறது. திருத்தத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்க தேசம் அல்லது பாகிஸ்தானிலிருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருக்கும்  இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், சமணர்கள் (Jains), பார்சிக்கள் அல்லது கிறித்தவர்கள் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தி யாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேல் வசித்திருந்தால் இயற்கையாகவே இந்தியக் குடியுரிமை பெற அவர்கள் தகுதி படைத்தவர்களாக முடியும். இயற்கையானமுறையில் குடிமக்களாவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 11 ஆண்டுக ளுக்குக் குறையாது வசித்திட வேண்டும் என்று தற்போது இருந்துவரும் கால வரையறையை இச்சட்டத்திருத்தம் தளர்த்தியிருக்கிறது. ஆனாலும், இந்த ஷரத்து இம்மூன்று நாடுகளி லிருந்தும் இந்தியாவிற்கு வந்துள்ள முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. அவர்கள் இப்போதும் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களாகவே கருதப்படுவார்கள். மதத்தின் அடிப்படையில் இவ்வாறு  செய்யப்பட்டுள்ள பாகுபாடு தான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒன்றாகவும், சட்டவிரோதமான ஒன்றாகவும் ஆக்குகிறது.

பாஜக இந்தச் சட்டமுன்வடிவை சென்ற மக்களவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றியிருந்தது. ஆனால், அதனை அவர்களால் மாநிலங்களவையில் பெரும் பான்மையில்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சட்டமுன்வடிவை இவர்கள் கொண்டுவருவதற்கான உள்நோக்கம், அவர்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலின் மூலம், வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமுக்குப் புலம் பெயர்ந்து வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமையை உத்தரவாதப்படுத்தக்கூடிய அதே சமயத்தில் அதே போல் வந்துள்ள முஸ்லிம்களை விலக்கி வைக்க வேண்டும் என்பதேயாகும். அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை காரணமாக, 1971 மார்ச் 24க்குப் பின்னர் அம்மாநிலத்திற்குள் வந்த அனை வரும் குடியுரிமைப் பதிவிலிருந்து நீக்கப்படும் நிலை ஏற் பட்டிருப்பதால் இந்தத் திருத்தம் அங்கே இன்றியமையாத தாகிறது.

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு நிறைவேறுவதற்கு முன்பாகவே வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. இதன் விளை வாக வங்க தேசத்திலிருந்து வந்துள்ள இந்துக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தேசியக் குடிமக்கள் பதி வேட்டிலிருந்து விலக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத னால்தான், அஸ்ஸாம் பாஜக மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்தி ருக்கின்றன. இவ்வாறு மோடி அரசாங்கத்துக்கு, நாடு முழு மைக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு முன், குடியுரிமைத் திருத்தச் சட்டமுன் வடிவை, நிறைவேற்றிவிட வேண்டும் என்பது அவசரமான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய கொடூரமான நடவடிக்கை யை எடுக்கும்போது அதனால்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு நாட்டின் இதர பகுதிகளுடன் மீண்டும் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

குடிமக்கள் திருத்தச் சட்டமுன்வடிவு, அஸ்ஸாமிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் மக்களின் கடும் சீற்றத்தினை எதிர்கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் மக்கள், இந்தச் சட்ட முன்வடிவு தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என நினைக்கிறார்கள். அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி இவர்களு க்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியில், 1971 மார்ச்சுக்குப் பின்னர் அஸ்ஸாமுக்குள் நுழைந்த அனைவருக்கும் குடி யுரிமை வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டிருந்தது. சட்ட விரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களை சட்டப்பூர்வ மானவர்களாக மாற்றுவதற்காக, இக்காலக்கெடு 2014 டிசம்பர் 31க்கு நீட்டப்பட்டதால், குடியுரிமை திருத்தச் சட்ட முன்வடிவு அஸ்ஸாம் ஒப்பந்தம் மூலம் 1985இல் மிகவும் கவனத்துடன் சமன்செய்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வீழ்த்தியிருக்கிறது. 

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலுமே, இச்சட்டத் திருத்தத்தின் மூலம், புதிதாகக் குடியுரிமை பெறும் மக்களின்  மூலம்  தங்கள் பாரம்பர்ய அடையாளங்கள் நசுக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள். வட கிழக்கு மாநிலங்க ளில் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்குள் சேர்க்கப்பட்டுள்ள பழங்குடியினப் பகுதிகளுக்கும் மற்றும் உள் கோட்டுக்குள் வருகின்ற பகுதிகளுக்கும் (areas covered under the Inner Line) விலக்கு அளிக்கப்படும் என்று, கூறியிருப்பதன் மூலம் இம்மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கிட மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள், தோல்வி அடைந்து விட்டன. ஏற்கனவே இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வெளியிலிருந்து வரும் மக்கள் அங்கே குடியேறி வாழ்வ தற்குத் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருவதால், மோடி அரசாங்கத்தின் இத்தகு முயற்சிகளால் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.   

குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவும், தேசியக் குடிமக்கள் பதிவேடும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு, புலம்பெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படுவதை சட்டரீதியாக மாற்றுவதற்கு வழி செய்யும்  அதேசமயத்தில், தேசியக் குடிமக்கள் பதிவேடு முஸ்லிம் ஊடுருவலாளர்கள் என்று கூறப்படுகிறவர்களைக் குறி வைக்கிறது. இதன்மூலம் பாஜகவின் குறிக்கோள் என்ன வெனில், இரண்டாம்தர குடிமக்கள் என்று முஸ்லிம் மக்களை ஆக்கி அவர்களின் உரிமைகளை மட்டுப்படுத்த வேண்டும் என்பதேயாகும். இந்தச் சிந்தனையின் பின்னே, வி.டி. சாவர்க்கரால் கூறப்பட்ட இரு தேச சிந்தனை ஒளிந்தி ருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கிடையேயான இயக்கங்களை தங்களுடைய மதவெறி நடவடிக்கைகளை கூர்மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்களுடைய பாஜக-ஆர்எஸ்எஸ் பிளவுவாத அரசியலுக்குப்  பொருந்தக்கூடிய விதத்தில் ஒரு புதிய பிளவுவாத நிகழ்ச்சிநிரலை உருவாக்கிட வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாகும். குற்றவியல் திருத்தச் சட்டமுன்வடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் அதே சமயத்தில், குற்றவியல் திருத்தச் சட்டமுன்வடிவு – தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக பாஜக கைக்கொண்டுள்ள கொடிய சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டும் விதத்தில் விரிவான அளவில் பிரச்சாரத்தையும் முடுக்கிவிட வேண்டும்.             

டிசம்பர் 11, 2019 
தமிழில்: ச.வீரமணி

;