headlines

img

பிரிட்டன் அரசியல் தலைவர் கோர்பின் மீள்வார்....

பிரிட்டனின் சமீபகாலத்திய தலைசிறந்த அரசியல்வாதியான ஜெர்மி கோர்பின், அவர் தலைமைப் பொறுப்பு வகித்த பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியிலிருந்து திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது.  தமது 16வது வயதிலேயே பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராகிவிட்ட கோர்பின், அரை நூற்றாண்டுக்கும் மேலாக அக்கட்சியில் தன்னை கரைத்துக் கொண்டவர்.  பிரிட்டன் தொழிலாளர்களின் நலனுக்காக  இடைவிடாது குரல்கொடுத்தவர். தனது நீண்ட அரசியல் பயணத்தில்2015ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் பிரிட்டனில், தொழிலாளர் கட்சியின் குரல், பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்திற்கானதாக மாறி ஒலிக்கத் துவங்கியது. அதற்கு முன்பு பல்லாண்டு காலம் கட்சிக்குள்ளேயே சோசலிசப் பிரச்சாரம் மேற்கொண்ட தோழர்களுக்கு தலைமையேற்றிருந்தவர் கோர்பின்.

தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு கடந்த 5ஆண்டு காலத்தில் பிரிட்டனில் தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்ததோடு, மாற்றுப் பொருளாதாரக்கொள்கைகளையும் இடதுசாரி சிந்தனைகளையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்த வண்ணம்இருந்தார். இதனால் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இடதுசாரி எதிர்ப்பு சிந்தனைகொண்ட வர்கள், கோர்பினுக்கு எதிராக ரகசிய சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள். அதன்விளைவு, கொரோனா ஊரடங்கு காலத்தில், 2020 ஏப்ரல் மாத இறுதியில் கட்சித்தலைவரான கோர்பின் மீது திட்டமிட்ட ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட் டது. 2016ல் நடந்த தேர்தலின்போது கோர்பினுக்கு ஆதரவாக பணியாற்றிய ஊழியர்களில் சிலர் சமூக ஊடகங்களில் யூத சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக, தற்போது ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி, அது குறித்து கோர்பின் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்மீதும் அவரது சகாக்கள் மீதும் மனித உரிமை மீறல் என்ற பெயரிலான குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன. இந்த விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் தலைவராக கோர்பினின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், அக்கட்சியின் புதியதலைவராக சர் கெய்ர் ஸ்டார்மர் என்பவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கட்சிக்குள் கோர்பினுக்கு எதிராக, இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிராக தீவிர வலதுசாரிக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வந்தவர் இந்த ஸ்டார்மர். இவரை எப்படியேனும் தலைவராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சிக்கு வெளியில் உள்ள யூத இனவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில் தொழிலாளர் கட்சிக்குள் உள்ள வலதுசாரி ஆதரவாளர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டார்மர், பொறுப்பு க்கு வந்தவுடன், கோர்பின் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்களை காரணம்காட்டி, அவரது அரை நூற்றாண்டுக்கால அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வை அஸ்தமிக்கச் செய்யும் இழிநோக்கத்துடன் சஸ்பெண்ட் செய்து அறிவித்துள்ளார்.  இது கோர்பினுக்கு எதிரான தாக்குதல் அல்ல; இடதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான தாக்குதல்.
 

;