headlines

img

ஆலோசனையும், அறிவுரையும் மட்டுமே போதாது

நாடு தழுவிய முறையில் அறிவிக்கப் பட்டுள்ள ஊரடங்கு மே 3-ஆம் தேதியுடன் முடி வடைகிறது. இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஊரடங்கை நீட்டிப்பதற்கான தேவை உள்ளது என்றே மாநிலங்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் வெறும் அறிவிப்போடு மத்திய அரசு நின்று விடக்கூடாது. கடந்த முறை மாநில முதல்வர்களு டன் பிரதமர் மோடி நடத்திய காணொலி ஆலோசனையின்போது தமிழக முதல்வர் உட்பட  பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத் திற்கான நிதித்தேவையை எடுத்துரைத்தனர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அதை கேட்டுக்கொண்டார்களே தவிர எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை.

இந்தப் பின்னணியில் ஊரடங்கை நீட்டிப் பதற்காக மட்டுமே ஆலோசனை நடத்துவது என்பது அர்த்தமற்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் மக்கள், பொதுவாக ஏழை-எளியவர்கள்,  அன்றாடம் உழைத்துப்பிழைக்கும் கோடிக்கணக் கானோர் படும் துன்ப-துயரங்கள் சொல்லும் தரமன்று.

மத்திய அரசு அறிவித்துள்ள பெயரள விற்கான நிவாரண உதவி எந்த வகையிலும் போது மானதல்ல. மாநிலங்களுக்குரிய நிதி ஒதுக்கு வதன் மூலம் தான் மக்களுக்கு தேவையான உதவிகளை மாநிலங்கள் செய்ய முடியும். ஆனால், மத்திய அரசு உதவமறுப்பது மட்டு மின்றி, மாநிலங்களின் வருவாயை மேலும் மேலும் பறிப்பதிலேயே குறியாக உள்ளது.

மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் மக்கி மண்ணாகிற உணவு தானியங்களை ஏழை-எளிய மக்களுக்கு எடுத்து விநியோகியுங்கள் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது வலி யுறுத்துகிறது. ஆனால், அரிசியை எத்தனால் மற்றும் கிருமி நாசினி தயாரிக்க பயன்படுத்தப் போவதாக அறிவிப்பது கொடுமையிலும் கொடுமை.

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரும் பிரச்சனை யாக உள்ளது. இதைத் தீர்ப்பதில் பிரதான பங்கு வகிக்க வேண்டியது மத்திய அரசு. ஆனால், இலவச ஆலோசனை வழங்குவதோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக மோடி அரசு கருதுகிறது. உலகளவிலான ஊரடங்கு தளர்த்தப்படும்போது பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை திருப்பி அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவர்களை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடு குறித்தும் மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.

அதிகாரக்குவிப்பின் மூலம் இந்தப் பெருந்தொற்றை சமாளிக்க முடியாது. மத்திய-மாநில அரசுகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும், மக்கள் இயக்கங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே பிரச்சனையல்ல. அதன்பிறகு நாட்டின் பொருளாதாரத்தை, குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்தை புனரமைக்க வேண்டிய மிகப்பெரிய தேவை உள்ளது. மத்திய அரசு புரிந்துகொண்டு அதற்கேற்ற அணுகுமுறையை வகுக்க வேண்டும். 

;