headlines

img

வேலையில்லா இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் அதிமுக அரசு....

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படமாட்டாது என்று  அத்துறைக்கான அமைச்சர் தங்கமணி மீண்டும் தெரிவித்துள்ளார். தனியார் மயம் தொடர்பான  பிரச்சனை எழும்போதெல்லாம் அரசும் அமைச்சரும் இந்த பதிலைகூறத் தவறுவதில்லை. ஆனால் உண்மையில் வாரியத்தின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு  என அனைத்து பிரிவுகளிலும் கட்டம் கட்டமாகதனியார்மயத்தை அதிமுக அரசு புகுத்தி வருகிறது.

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை  மத்திய பாஜக அரசு சீரழித்து வருகிறது. மாநில மின்வாரியங்களையும் தனியார்மயமாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த காலங்களில் மத்திய அரசின் சில கொள்கைகளை தைரியமாகஎதிர்த்தார்.  ஆனால் அவரது ஆட்சியை நடத்துகிறோம்  என்று கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்கள் மின்வாரியத்தை ஓசையில்லாமல் சீர்குலைத்து வருகிறார்கள்.  கேட்டால் மக்களுக்கு 24 மணிநேரமும் தடையில்லாமல் மின்இணைப்பு வழங்கவேண்டும் என்பதற்காக சில அத்தியாவசிய பணிகளில் அவுட் சோர்சிங் முறையில் வெளியில் இருந்து ஆட்களை எடுக்கிறோம்என்று கூறுகிறார்கள்.

மின்வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில்25ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் தமிழகத்தில் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை பணியமர்த்த முடியாதா? செய்யமுடியும். மின்வாரியத்திலேயே ஒப்பந்ததொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பணிநிரந்தரப்படுத்தலாம். மீதமுள்ள வேலைகளில் புதிய ஆட்களை நியமிக்கலாம். இதையெல்லாம்செய்யாமல் அதிமுக அரசு மின் வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களை அவுட் சோர்சிங் என்ற பெயரில்  தனியாரிடம் ஒப்படைத்துள்ளது நியாயமற்ற செயல் மட்டுமல்ல தமிழகஇளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.

ஏற்கனவே துணை மின் நிலையங்கள் தனியார்பராமரிப்பில் விடப்பட்ட நிலையில், வீடுகள்,தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்புகளில் ஏற்படும் பழுதை சரிசெய்யும் பணிக்காகதனியார் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த ஒப்பந்தத்தை நீடித்துக்கொள்ளலாம் என்று மேற்பார்வை பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பணியாளருக்குதினமும் 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுமாம்.குறைந்த சம்பளத்தை அரசே ஊக்குவிக்கலாமா?  இது அமைச்சர் சொல்வதைப்போல் தற்காலிகஏற்பாடாக தெரியவில்லை. நிரந்தரமாகவே பணியிடங்கள் அனைத்தையும் படிப்படியாக  தனியார்வசம் ஒப்படைப்பதற்கான முதல் நடவடிக்கையாக தோன்றுகிறது. ஏற்கனவே மின் உற்பத்தியை அரசு அதிகரிக்காமல் தனியாரிடம் வாங்குகிறது. தனியாரை ஊக்குவிக்கும் போக்கை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டும்  இந்தப் பணியிடங்களைநிரப்பி மக்களுக்கு தடையின்றி மின்சார சேவைகிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 

;