headlines

img

ஆளுநரின் தாமதத்திற்கு காரணம் என்ன?

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுவழங்க சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துவிட்டார். 

இந்த மசோதாவின் நிலை குறித்து இரண்டு நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆளுநரின் செயலாளருக்கு உத்தரவிட்டது. நீட் தேர்வு வம்படியாக திணிக்கப்பட்டபிறகு அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்படுகிறது. கடந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 1லட்சத்து 66 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வுக்குமுன்பு குறைந்தபட்சம் ஒரு சதவீத அளவுக்காவது அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபிறகு இதுவரை 11 மாணவர்கள் மட்டுமேமருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைத்தது.

இந்தநிலையில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு வகை செய்து தமிழக அரசுசட்டம் இயற்றியது. இதற்கு ஆளுநர் ஒப்புதல்அளித்திருந்தால் இந்தாண்டே இது நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால் ஆளுநர் திட்டமிட்டே இதை இழுத்தடிப்பதாகவே தோன்றுகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கே கொண்டு செல்லாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது. இதனால் நீட் தேர்வு எனும் பெயரில் நடைபெறும் பாரபட்சமான அநீதி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேர்வுக்கு முன்னும் பின்னும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது.

இந்தநிலையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது குறைந்தபட்ச நிவாரணமாக அமையும். நீட் தேர்வுமுடிவு வெளியாகவுள்ள நிலையில் ஆளுநர் உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.இதனடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிசேர்க்கை நடைபெறும் என்பதில் தமிழக அரசுஉறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான அழுத்தம் காரணமாக ஒப்புக்கு மசோதா நிறைவேற்றியதாகவே கருத வேண்டியிருக்கும்.இந்த பிரச்சனையில் தமிழகத்தில் உள்ளபெரும்பாலான கட்சிகள் ஒன்றுபட்ட நிலை எடுத்துள்ளதை நீதிபதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். நீட் எனும் அநீதி தொடரும் நிலையில் குறைந்தபட்ச நிவாரணம் கிடைப்பதற்கு கூட ஆளுநர் முட்டுக்கட்டை போடக்கூடாது.
 

;