headlines

img

இது வளர்ச்சி அல்ல...  

மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி முறையில்  உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காகவே அனைத்து துறைகளிலும் மாற்றங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன என்றும், கடந்த ஆறேழு மாதங்களில் அதிகரித்து வரும் சீர்திருத்தங்களின் வேகத்தை அனைவரும் கவனித்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

பிரதமர் கூறுகிற வளர்ச்சி யாருக்கானது? என்பதை இந்த நாடு நன்கறியும். அவருக்குவேண்டப்பட்ட கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே அவரதுஅரசின் திட்டங்களும், சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படுகின்றன என்பதை மக்கள் அறிவார்கள். அவர் கூறும் தேசத்தின் வளர்ச்சி என்பது நிலம், நீர், ஆகாயம் என பல நிலைகளிலும் செய்யப்படும் சீர்திருத்தங்கள் இதனை நன்குவெளிப்படுத்துகின்றன. தேசிய கல்விக்கொள்கை நமது கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்வதாக இருந்தால் வேளாண் சார் சீர்திருத்தங்கள் விவசாயிகளை வலிமையானவர்களாக மாற்றக்கூடியதாகவும், தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்து வளர்ச்சிக்கான உந்துசக்தியாகவும் உள்ளன என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஏழை, எளியவர்களுக்கு கல்வி அறிமுகமே கிடைக்காமல் செய்யும் வண்ணம் இருப்பதற்காகவே ஒரு கல்விக் கொள்கையை கொண்டு வந்திருப்பதை நாட்டு மக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தும்கூட அமல்படுத்திட துடிப்பதை காண்கிறோம். வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களும், விரக்தியின் விளிம்பில் கிடக்கும் விவசாயிகளை ஆழக் குழிதோண்டி புதைக்கும் காரியத்தை செய்வதற்காகவே, கார்ப்பரேட்டுகளிடம் அடிபணிந்து விவசாயத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டவை என்பதனால்தான் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும்போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் மூன்று புதிய சட்டங்கள் கொண்டு வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படும் சட்டம்நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவே. ஏற்கெனவே 14 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது நாடறிந்தது. அத்துடன் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கொடுமையானது. விமான நிலையங்களை கூட தனியாருக்குதாரை வார்ப்பதும், விண்வெளி, ராணுவம் ஆகியவற்றிலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடுவதும், நாட்டின் வளர்ச்சிக்கானதா? பெரு நிறுவனமுதலாளிகளின் வளர்ச்சிக்கானதா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இவர்களது அதிவேகசீர்திருத்தம் என்பது நாட்டுக்கு ஆபத்தையே விளைவித்திருக்கிறது என்பதை மறைத்துவிட்டு தங்களுக்குத் தாங்களே சபாஷ் போட்டுக் கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அதுஉண்மையான வளர்ச்சியும் ஆகாது.