headlines

img

ஆளும் வர்க்க பிரச்சார கருவிகள்..

கேரள ஊடகங்கள் பெரும்பாலானவை எப்போதுமே வலதுசாரி அரசியலின் பிரச்சாரகர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இப்போது உச்சக்கட்ட கம்யூனிச எதிர்ப்பில் இறங்கியிருக்கின்றன. தொழில்முறை ரீதியாகவே பொய்களை உண்மை என திரித்து 
விற்பனை செய்யும் ஒரு மோசமான வணிகத்தில்அவை ஈடுபட்டிருக்கின்றன. வரலாறு நெடுகிலும்கம்யூனிச இயக்கத்தை, இன்னும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியையும் அதன் அரசையும், அதன் முதல்வரையும் குறி வைத்து பழிதூற்றுவதும், கொடியவர்களாக சித்தரிப்பதுமான காரியத்தையே கேரளத்து ஊடகங்கள் செய்து வந்திருக்கின்றன. இப்போது பினராயி விஜயன் அரசை எப்படியேனும் வீழ்த்தியாக வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்கையை முன்னின்று நடத்தும் பொறுப்பினை ஏற்றிருப்பது போலவே நடந்து கொண்டிருக்கின்றன.

பினராயி அரசுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத தங்கக் கடத்தல் வழக்கு உட்படமுற்றிலும் பொய்களையும், புனை சுருட்டுகளையுமே மாத்ருபூமியிலிருந்து மலையாள மனோரமா வரையிலும் அச்சு மற்றும் மின்னணுஊடகங்கள் ஊதித் தள்ளி வருகின்றன. அதேவேளை, தங்கக் கடத்தலில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கும் கேரளத்து முஸ்லிம் லீக் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்த போதிலும் அங்குள்ள ஊடகங்கள் அதைப்பற்றிய விவாதங்களை வெளியிட மறுக்கின்றன. மறுபுறம், இந்த உலகமே வியக்கும் விதத்திலும், பாராட்டும் வகையிலும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதிலும் தாமதப்படுத்துவதிலும், மரண விகிதத்தை வெகுவாக கட்டுப்படுத்துவதிலும் பினராயி அரசு படைத்துள்ள மாபெரும் சாதனையை மக்கள் மத்தியில் எந்தவிதத்திலும் கொண்டுசெல்வதில்லை என்பதில் பிடிவாதமாக நிற்கின்றன. அதுமட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் இருப்பது மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி; ஆனால், அதே மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள்தான் எதிர்க்கட்சிகள் என்ற பெயரிலான அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகரமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 45 நாட்களில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 ஊழியர்கள் - சியாத்(காயாங்குளம், ஆலப்புழா), முகமது ஹக் மற்றும் மிதிலாஜ்(வெங்ஙாரமூடு, திருவனந்தபுரம்)மற்றும் சனூப்(திருச்சூர்) - கொடூரமான முறையில், ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கிறபோதிலும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இந்தப் படுகொலைச் சம்பவங்களில்  அதிகபட்ச நிதானம் கடைப்பிடித்திருக்கிறார்கள். மேற்கண்ட நான்கு தியாகிகளின் குடும்பத்தினரும், குழந்தைகளும் கதறி அழுத கண்ணீரின் ஒரு காட்சியைக் கூட கேரளத்து ஊடகங்கள் வெளியிடவில்லை; ஒளிபரப்பவில்லை.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்பட்டாலும், கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் ஆளும் வர்க்கப் பிரச்சார கருவிகளாக செயல்படுகின்றன. கேரளத்துஊடகங்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 

;