headlines

img

சூரப்பாவை நீக்குக....

புகழ்மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் திணித்தபோதே கடும்சர்ச்சைகள் எழுந்தன. அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகின்றன. 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது, மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துகோருவது ஆகிய விசயங்களில் மாநில அரசின் நிலைபாட்டுக்கு மாறாக துணைவேந்தர் சூரப்பா நிலைபாடு எடுத்தார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அவர் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம்எழுதிய போது, மாநில அரசின் நிதியுதவி தேவையில்லை; பல்கலைக்கழகமே நிதித் தேவையை நேரடியாக வசூலித்துக் கொள்ளும் என்று அவர்கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசின்அதிகாரத்தின்கீழ் கொண்டு செல்வதற்கும், ஏழை,எளிய மாணவர்கள் அந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதை தடுத்து கட்டணக்  கொள்ளைக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். மாநில அரசும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று கூறியது. எனினும் சூரப்பாதன்னுடைய நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 

இந்நிலையில், அவர்மீது பல்வேறு ஊழல்புகார்கள் வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக்குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என்றும் மாநில அரசின் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.ஆனால் தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், தாம் தூய்மையான நபர் என்றும் சூரப்பாதனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார். 

பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு, அரியர் விவகாரம், தேர்வுத் துறை மறுமதிப்பீட்டில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அவர் மீது வந்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. மேலும் அவருடைய மகளை பல்கலைக்கழகத்தில் கௌரவ பதவிக்கு நியமித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான தகுதி தன்னுடைய மகளுக்கு இருப்பதாகவும், இதில் தவறு இல்லை என்றும் சூரப்பாகூறுகிறார். தாம் துணைவேந்தராக உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மகளை நியமிப்பது குறித்த தார்மீக கூச்சம் கூட அவருக்கு இல்லை. 

ஊழல் புகார்களுக்கு உள்ளாகி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள துணைவேந்தர் சூரப்பாவுக்கு இன்னமும் பதவியில் நீடிக்கும் அருகதையில்லை. உடனடியாக அவர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணைநடத்துவதோடு அவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான்நியாயமான விசாரணை நடைபெறும். அவர்மீது ஒன்பது மாதங்களுக்கு முன்பே புகார் வந்தபோதும், மாநில அரசு ஏன்  உடனடியாக விசாரிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை சீரழிக்க முயற்சி செய்யும்துணைவேந்தர் இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது.
 

;