headlines

img

உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள அர்த்தமுள்ள கேள்வி...

தேச விரோத குற்றச்சாட்டை சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 124 ஏ பிரிவுநாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும்தேவைப்படுகிறதா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒன்றிய அரசுக்கு அர்த்தமுள்ள கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி எஸ்.ஜி.பெம்பாட்கெரே தொடர்ந்த வழக்கு மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா தொடுத்த வழக்குகளை இணைத்து விசாரித்தபோது அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். 

எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா அளித்துள்ளமனுவில் 124 ஏ பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்குஎதிரானது; அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ரமணா தேச விரோத சட்டத்தின்கீழ் சுமத்தப்படும் வழக்குகளில் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது. கைது மற்றும் விசாரணையே ஒரு தண்டனை போல பயன்படுத்தப்படுகிறது. ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தை பயன்படுத்தி ஒட்டு மொத்த காட்டையேஅழிப்பதற்கு இணையாக இது உள்ளது என்று சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றொரு கேள்வியையும் எழுப்பியுள்ளார். பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல சட்டங்கள்திருத்தப்பட்டுள்ளன. ஆனால் அப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்தின் பிரிவுகன் இன்னமும் நீடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டஒரு சட்டம் இன்றைக்கு ஆட்சியாளர்களால் கருத்துரிமையை நசுக்க பயன்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. 
குடியுரிமை சட்டத்தை திருத்தி சிறுபான்மை மற்றும் பட்டியல் பிரிவு, பழங்குடி மக்களின் குடியுரிமையை பறிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. வேளாண் சட்டங்களை திருத்தி வேளாண்மையை விவசாயிகளிடமிருந்து பறிக்க முயல்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றுகிறது.ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி நியாயமான ஜனநாயக உரிமைகளுக்காக, அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள கருத்துரிமைக்கு எதிராககட்டாரி வீசுகிறது. மனித உரிமை போராளிகள் பலர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி சிறையிலேயே மரணமடைந்துள்ளார். மேலும் பலர் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய தில்லி மாணவர்கள் மீதுஇந்த கொடூரச் சட்டம் ஏவப்படுகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி அர்த்தமுள்ளது. சர்ச்சைக்குரிய 124ஏ சட்டப் பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டும். மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடுபவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்திசித்ரவதை செய்யப்படுகிற கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

;