headlines

img

இடைநிற்றலுக்கே வழிவகுக்கும்

மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  முதலில் மத்திய அரசின் இந்த முடிவைத் தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிமுக அரசு கூறியது. பின்னர் அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கும் என்றது. இப்போது அமல்படுத்தப்போகிறோம் என்கிறது. தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட பொதுவிநியோக முறை சிறப்பாகச் செயல்படும் போது இலக்கோடு கூடிய பொதுவிநியோக முறையே தேவை யில்லை என்று  வீரவசனம் பேசிய அதிமுக ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசின் நிர்ப் பந்தத்திற்கு அடிபணிந்து “ஒரே நாடு ஒரே ரேசன்’’ திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடுத்தகட்டமாக 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வையும் அமல்படுத்தத் தயாராகி விட்டார்கள். 

ஒன்று முதல் 8 ஆம்வகுப்பு வரை  அனைவரை யும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்கிற முறை தற்போது அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் புலம்புகின்றனர். மாணவர் தேர்ச்சி பெறவில்லை என்றால் சரியாகக் கற்றுக் கொடுக்கத் தவறிய ஆசிரியர்களும் இன்றைய கல்விக்கொள்கையும்தான் காரணமாக இருக்கமுடியுமே தவிர மாணவர்கள் அல்ல. எனவே தோல்வியை மாணவர்கள் மீது திணிப் பதை ஏற்கமுடியாது.  சமூக நீதியின் அடித்தளமே கல்விதான்.கல்வி ஒரு காலத்தில் பலருக்கு மறுக்கப்பட்டது. பலதடைகளைத் தாண்டி கடந்த நூற்றாண்டின் பாதியில் தான் அனைவருக்கும் கல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.  அப்படிப்பட்ட சமூக பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிலேயே நிற்கவைத்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? தேர்வில் தோல்வியடைந்தால் சக குழந்தை களின் கேலிக்கு  ஆளாகும். அப்போது மனதள வில்  மிகப்பெரிய பாதிப்பை அக்குழந்தை எதிர் கொள்ளவேண்டியிருக்கும். இதனால் அந்த  குழந்தையின் மனதில் பள்ளிக்கே செல்லவேண் டாம் என்ற எண்ணம்தான் மேலோங்கும். இப்படி குழந்தைகளைப் பள்ளியிலிருந்து ஓடவைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகத்தான் இந்த பொதுத்தேர்வைப் பார்க்கவேண்டியுள்ளது.

கல்வித்தரத்தை மேம்படுத்தவேண்டிய அவ சியம் இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்வு நடத்தி னால் தான் தரம் உயரும் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இப்போதும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாணவரின் கல்வித்திறனை ஆசிரியர்கள் சோதித்துத்தான் அடுத்த கட்டத்திற்கு அனுப்புகிறார்கள். அடுத்த வகுப்பிற்குச் செல்வதிலிருந்து தேக்கி வைப்பதால் மட்டும் ஒருகுழந்தை  படித்து விடும்  என்பதும் பயமிருந்தால் படித்துவிடும் என்பதும் சொத்தையான வாதமாகும். குழந்தைகளுக்கு  கற்றுக்கொள்ளத் தடையாக இருப்பது எது என்று ஆய்வு செய்து அதைக் களைவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும். மாணவர்கள் மீது பொதுத்தேர்வு என்ற சுமையை ஏற்றுவதால் அது இடைநிற்றலுக்கே வழிவகுக்கும்.

;