headlines

img

உடனடி பதிலடிகள் 

 இந்திய வரலாற்று காங்கிரசின் 80வது மாநாட்டின் துவக்கமே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக் களமாக மாறியிருக்கிறது. அது போராட்டக் களமாக மாற்றப்பட்டதற்கு காரணம், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் அடாவடியான பேச்சுதான் என்றால் மிகையல்ல.  இந்திய வரலாற்று காங்கிரசின் 80வது மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் சனிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 1935ல் துவக்கப்பட்டு, நாடு முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாற்று பேராசிரியர்கள், அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள மிகப்பிரம்மாண்டமான வரலாற்றியல் அமைப்பு இது. கண்ணூரில் நடை பெறும் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தனது உரையின் போது திட்டமிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், இதை எதிர்த்து நடை பெற்று வரும் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் விதத்திலும் பேசினார். அவர் அப்படி பேசுவார் என அவையில் இருந்த பேராசிரியர் களும், மாணவர்களும் வரலாற்றுத்துறை அறிஞர்களும் எதிர்பார்க்கவில்லை என்ற போதிலும், அவரது பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடத் துவங்கிவிட்ட னர். ‘கேரள ஆளுநரே வெட்கம் வெட்கம்’ என்று அவையினுள் எழுந்த போராட்டக் குரலோடு, மேடையிலிருந்த இந்திய வரலாற்றியலின் மகத் தான அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் இர்பான் ஹபீப்பும் இணைந்து கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மத்திய அரசின் கொடிய நடவடிக்கைகளை எதிர்த்தும் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் போர்க்களங் களாக மாறியிருக்கின்றன. தில்லியில் துவங்கி நாகர்கோவில் வரை எந்தவொரு நகரமும் போராட்டக்களமாக மாறாமல் இல்லை.  இடதுசாரி இயக்கங்கள், மதச்சார்பற்ற ஜன நாயக இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் உள்பட மதவேறுபாடின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமே கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்திருக்கிறது. ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் போகும் இடமெல்லாம் இந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும், மிரட்டல் விடுத்தும், குடி யுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட நடவடிக்கை கள் தொடர்பாக முற்றிலும் பொய்யான விப ரங்களை வெளியிட்டு மக்களை திசை திருப்பும் முயற்சிகளோடும் நடமாடி வருகிறார்கள். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு ஒரு படி  மேலே போய், வாசலில் கோலம் போடும் பெண் களைக் கூட விட்டு வைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. சென்னையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்ட பெண் களை கைது செய்து வீரத்தைக்காட்டியிருக்கிறது.  இத்தகைய சூழலில், பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் கிடைக்கிற மேடைகளையெல்லாம் பாஜக அரசின் பிரச்சார மேடையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். கேரள ஆளுநரும் அதைத்தான் செய்திருக்கிறார். ஆனால் பதிலடி என்பது காத்திருந்து அல்ல...உடனுக்குடன் கிடைக்கும், நினைவில் கொள்ளுங்கள்.

;