headlines

img

எனக்கென்ன குறைச்சல்? - பழனி சோ.முத்துமாணிக்கம்

சிறுவர் கதை

விர்.. விர்.. என்று அடித்த காற்றில், மூங்கில் மரங்களில் கருவண்டுகள் துளைத்த ஓட்டைகள் வழியாக வந்த கூகூ... உய்ய்.. உய்ய்  என்ற ஒலிக்கோவை தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பிவிட்டது. அமைதியான சூழல்.வரதமாநதி அணைக்குத் தண்ணீர்வரும் ஓடைக்கரையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தவன் என்னை மறந்து தூங்கி இருக்கிறேன். வரையாடுகளும் புள்ளிமான்களும் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. பழனிமலைத் தொடரையே அதிரவைத்துக் கொண்டிருந்தன மயில்கள் தன் உரத்த அகவல்களால். தெற்குத் திசையில் குழந்தைகள் ஒருவர் பின் ஒருவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு ஓடி விளையாடுவது போல் மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டு வளர்ந்து, நெளிந்து, வளைந்து போய்க் கொண்டிருக்கிறது. இங்கிருந்து பார்க்கும்போது கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அழகாகத் தெரிகிறது. ‘ல’ என்ற எழுத்தைப்போல் வளைந்து செல்லும் மலைப்பாதையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்போல் இருக்கிறது. இங்கே எத்தனை ‘ல’ க்கள் இருக்கின்றன என ஆழ்மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

அப்போதுதான் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது எனக்கு. தும்பிக்கையைத் தூக்கிகொண்டு யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. ஒற்றையானையிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடந்த மாதம் மலையடிவாரத்தில் சட்டப்பாறை வனத்தில் காவலுக்கிருந்த பெரியவர் ஒருவரை யானை மிதித்துக் கொன்றுவிட்டது. சரி தப்பிக்க வழி பார்க்க வேண்டுமே என்று ஓடத் தொடங்கினேன். யானையின் பிளிறல் கேட்டது. ‘ஐயா நில்லுங்க.. ஓடாதீங்க.. நான் ஒன்னும் செய்யமாட்டேன். சாப்பிடறதுக்கு தென்னங் குருத்தோ கரும்புச் சோகையோ கெடைக்காதான்னுட்டு, நான் அலஞ்சுக்கிட்டு வர்றேன்” என்றது. வேறு வழியில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். சொன்ன வாக்குறுதிகளை மனிதர்கள்தான் காப்பாற்றுவதில்லை. மிருகங்களையாவது ஓரளவு நம்பலாம். கொஞ்சம் துணிச்சல் வந்தது. இருந்தாலும் பார்த்தசாரதி கோயிலில், பலநாள் பழகிய பாரதியாரையே மிதித்த யானை மனதிற்குள் வந்து அச்சுறுத்திக் கொண்டு இருந்தது. அச்சமில்லை.. அச்சமில்லை..என்று சொல்லிக்கொண்டேன்.

என்ன ஆனையப்பா.. வனத்துக்குள்ள கெடைக்காத தீனியா இங்க கெடைக்கப் போகுது?

வனத்தை எங்கேப்பா விட்டுவக்கிறீங்க..ஒசர ஒசரமாய் இருக்கற அம்புட்டு மரங்களையும் வெட்டி வெறகாக்கி வித்துத் தின்னுபோடறீங்க. நாங்க நடமாடற வழிகளயே அடச்சி, மாளிகை, ஆசிரமம்னு மறிச்சுக் கட்டீர்றீங்க. சட்டமாவது விட்டமாவது.. எல்லாத்தையும் ஒடச்சிர்றீங்களே. ஆனையப்பா.. அதெல்லாம் பெரிய எடத்து வெவகாரம். நாங்க எதுத்துப் பேசினா, தேசத் துரோகின்னு பட்டம் கட்டி ஓரம் கட்டீருவாங்க.. இந்த மண்ணுமேல அக்கறை இருக்கறவங்க தொடர்ந்து மரங்கள நட்டுக்கிட்டுத் தான் இருக்காங்க.

அட.. நிறுத்துங்கப்பா.. வருசா வருசம் நட்டகுழியிலேயே மரம் நடுவீங்களே, அதச் சொல்றிங்களா?

எல்லாம் ஒனக்குத் தெரியும். உம்மையா ஒழைக்கறவன் ஊருக்குப் பத்துப்பேர் இருப்பாங்கள்ள.. அதனால மரம்நடறத விடாமச் செய்துக்கிட்டு இருக்கறவங்களையும் பாக்கலாம்.சாமி பேரைச் சொல்லி மரங்கள வெட்டிச்சாச்சவனே இப்ப, மரம்நடலாம் எல்லாம் வாங்கன்னு வெளம்பரம் பண்ணிட்டுத் திரியறான். சரியப்பா.. என்னமோ செஞ்சுட்டுப் போங்க. ஏன் எடத்துல வந்து நீங்க நின்னுட்டீங்க. அப்ப எரைதேடி நீங்க இருக்கற எடத்துக்குத் தான நாங்க வந்தாகணும். அப்பிடி வந்துட்டா நீங்க செய்யற கூத்து இருக்கே.. அப்பப்பப்பா..

ஆனையப்பா.. நாங்க கூத்தா நடத்திக்கிட்டு இருக்கோம்? 

தும்பிக்கையை மேலுயர்த்திய யானை ஒருமுறை பிளிறிக் கொண்டது. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்ததுபோல் இருந்தது. பிறகு கோபமாகப் பேசத் தொடங்கியது. ‘என்னை வெரட்டுறதுக்காகப் பட்டாசு வெடிக்கிறீங்க.தாரை தப்பட்டை அடிக்கிறீங்க. இப்ப என்னமோ எங்கள வெரட்டறதுக்குப் புதுசாக் கண்டுபுடிச்சிருக்கிறீங்க போலிருக்கு... அதாம்ப்பா.. எங்களைக் கடிக்கும் தேனீக்களின் ரீங்காரம் போலப் பதிஞ்சு வச்சுக்கிட்டு அதை நான்வரும்போது சத்தமா ஒலிபரப்புறீங்க.என்னென்னமோ செய்யுறீங்க..பசியோடு அலையறானே.. ஏதாவது குடுத்தாப் பேசாமப் போயிருவானேன்னு நெனைக்கிறீங்களா?’. எனக்குச் சுருக்கென்றது. நம் உலக நடப்புகள் அனைத்தையும் தெரிந்த யானைபோல இருக்கிறது. ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் எனப் பேசத் தொடங்கினேன். ‘ஆனையப்பா, வெவரம் தெரியாமப் பேசாத.. எங்க மக்கள்ல எத்தனைபேர் பலநேரம் பட்டினிகெடக்கறாங்க தெரியுமா? மழையும் வந்து பல ஆண்டுகள் ஆச்சு. நெலமெல்லாம் வெடிச்சு வெடிச்சு பித்தவெடிப்புள்ளவன் பாதம்போல ஆயிருச்சு. மானாவாரிப் பயிராவது வெதைக்கலாம்னா எட்டுவழிச் சாலை ஒம்பதுவழிச் சாலைன்னுட்டு, அரசாங்கம் விவசாயிகள்ட்ட இருந்த காக்காணி அரைக்காணி நெலத்தையும் புடுங்குது. எங்க மக்களும் உன்ன மாதிரித்தான் வேலவெட்டி எங்காவது கெடைக்காதான்னுட்டு அலஞ்சுக்கிட்டு இருக்காங்க.. இதுல உனக்கு எப்பிடீப்பா தீவனம் கொடுக்கறது?.

தலையை ஆட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்த ஆனையப்பனின் சின்னஞ்சிறு கண்களில் இருந்து சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் வந்ததுபோல் இருந்தது.  ‘மனுசங்கள மனுசங்களே ஆள்ற நாட்டுலேயே இப்பிடி வறுமையா? ஏன் எதுத்துக் கேக்க மாட்டீகளோ?’ ஆனையப்பனின் ஆறறிவுச் சிந்தனை தென்பட்டது. ‘காட்டுல இருக்கற உனக்கே இம்புட்டுத் தெரிஞ்சா, எங்களுக்குத் தெரியாமலா போகும். எதுக்கறோம்.. எதுக்கறோம்..எதுத்துக்கிட்டுத் தான் இருக்கோம். ஒன்னும் நடந்தபாடில்லை. ரொம்ப நெருக்கிக் கேட்டா, முடிஞ்சா இங்க இரு..இல்ல வேற நாட்டுக்குப் போயிருன்றான். இல்ல.. நீ தேசவிரோதின்னு சொல்லிக் கொட்டடியில அடச்சுர்றான்.’ ‘பேசாம நீங்க எல்லோருமே எங்க காட்டுக்கே வந்திருங்களேன்’, ஆனையப்பன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன். 

அந்தநேரம் பார்த்துச் சில மலைமாடுகளும் மான்களும் முயல்குட்டிகளும் ஓடிவந்து ஆனையப்பனைப் பார்த்து, ‘என்ன ஆனைமாமா ரொம்பநேரமா இந்த மனுசங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க?’ என்று கேட்டது. ‘ஒன்னுமில்லை தங்கங்களா...கொஞ்சநாள்ல மனுசங்களும் நம்மளோட காட்டுக்கு வந்து தங்கப்போறாங்களாம்’. ஆனையப்பன் சொன்னதைப்பார்த்து மற்ற மிருகங்கள் சிரித்தன.. சிரித்தன..சிரித்துக் கொண்டே இருந்தன. எப்படி எல்லா மிருகங்களும் ஒன்றுக்கொன்று சண்டைபோடாமல் சேர்ந்து திரிந்துகொண்டிருக்கின்றன என்ற ஐயம் எழுந்ததைக் கேட்டே விட்டேன். ‘அவரவர் உணவை அவரவரே தேடிக்கிறோம். பசிச்சாத்தான் திங்கறோம்...சரி.. சரி.. ரொம்ப நாளாக் கேக்கணும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். கேக்கவா?’ ஆனையப்பன் முகத்தில் ஒரு கவலை தெரிந்தது.

‘ஏங்கிட்டவா.. ஆனையப்பா.. கேளு கேளு..’
 

 ‘வேறொன்னும் இல்லை.. எங்களப் பத்திக் கதை எழுதறவங்க எல்லாமே, ‘ஒரு காடு இருந்தது. அங்கே ஒரு சிங்கம் அரசனாக இருந்ததுன்னு’ எழுதறீங்களே! சிங்கத்தைவிடப் பெரியதா வலிமையா இருக்கற ஆனைங்க அரசனா வரக்கூடாதா? எனக்கென்ன கொறைச்சல்? சொல்லுங்க. சரி... என்னை விடுங்க..இந்த மலைமாடு.. புள்ளிமான்.. புலி இப்பிடி ஆராச்சும் அரசனா இருந்தா உங்களுக்குப் பொறுக்காதா? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற வரி நினைவுக்கு வந்தது. ஆனையப்பன் கேட்டது அருமையான கேள்வி. என்ன விடைசொல்வது எனக்கொஞ்சம் தயங்கினேன். பொய்யானாலும் பொருத்தமாகச் சொல்லவேண்டும் என்று எண்ணத் தொடங்கினேன்.  ‘ஆனையப்பா இப்பிடி எழுதறது எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இருந்தே பழக்கமாயிருச்சு. நாங்களும் அப்பிடியே எழுதிக்கிட்டு வர்றோம். அதுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்ல.. நான் சமாளிப்பதைக் கேட்டுப் பக்கம் வந்த அணில் கீச்கீச்சென்று நகைத்துவிட்டுப் போனது.

‘ஆனையப்பா நீ நடக்கும்போது முன்னால பாத்துப் போய்க்கிட்டே இருப்ப. ஆனா சிங்கம் நடந்துவர்றதைப் பார்த்துருக்கறயா?’.

‘ரொம்ப வெனயமாப் பேசறதா நெனப்பா? எல்லாருக்கும் மொகத்துலதான்யா கண்ணிருக்கும்.முன்னால பாக்காம முதுகுப் பக்கமா பாத்தா நடப்பாங்க?. ஆனையப்பன் செய்த எதிர்வாதத்தைக் கேட்டு மானொன்று துள்ளித் துள்ளி ஆடிச் சிரித்தது. ‘அப்படி இல்ல மானே.. சிங்கம் நடந்துவரும்போது பாத்தா, நின்னு நின்னு, தான் நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பாத்துக்கிட்டே போகும்.இதுக்குத் தமிழ்ல ‘அரிமா நோக்கு’ன்னு சொல்வாங்க. வந்த வழி சரிதானா? இல்லாட்டி வழியை மாத்தணுமான்னுட்டுத் திட்டம் போட்டபடி நடக்கும். அப்பத்தான் கடந்த வழியில ஏதாச்சும் கொறை இருந்தா மாத்திக்கிடலாம். இப்பிடி முன் எச்சரிக்கையோட இருக்கற சிங்கத்தை, நாங்க அரசராக்கி எழுதறோம்.’ என்றேன்.

ஆனையப்பன் என்பேச்சில் சமாதானம் ஆகிவிட்டானா எனப் புரியவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் காட்டுக்கே போகக் காலடி எடுத்து வைத்தது.போகும்முன் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். ‘நல்லாவே சமாளிக்கற.. போகட்டும்.மிருகங்களுக்குப் புத்திசொல்லிக் கதைக்கறதுக்கு முந்தி, மனுசங்களும் நடந்துவந்த பாதையிலே என்ன கோளாறுன்னு தெரிஞ்சுக்கிட்டு அடுத்த அடியைக் கவனத்தோடு எடுத்து வைங்க.’

;