headlines

img

திசையற்று.....

செகந்திராபாத் ரயில் சந்திப்பில் ரயில் வருமுன்னே பொதுபெட்டி நிற்கக்கூடிய இடத்தில் பிச்சைக்காரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். சீருடையில்லாக் காவலர்கள் கண்காணிப்பில் தரகர்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். இவர்களை எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை.! வெங்கட்டம்மா கெஞ்சும் குரலில் இவர்களை அழைத்து வந்த தரகரிடம் கேட்டாள். தரகர் காவலரைக் காட்டி அவரிடம் கேட்கச் சொன்னார். காவலர் முறுக்கு மீசையுமாய், மிரட்டும் கண்களுமாய் நின்றிருந்தார். அவரைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவரிடம் எப்படிக் கேட்பது; அவர் லத்தியால் அடித்தாலோ, லத்திகொண்டு ஒரு தள்ளு தள்ளி விட்டாலோ  உயிர் போனால் பரவாயில்லை, கைகால், இடுப்பு ஒடிந்து விட்டால் பிச்சை எடுக்கக்கூட ஓரிடம் விட்டு இன்னோரிடம் நகர முடியாதே, எங்கோ குப்பைமேட்டிலோ சாக்கடை பள்ளத்திலோ விழுந்து புழுத்து அழுந்திச் சாகவேண்டியது தான். இந்த நினைப்பே பேரச்சத்தையும் பெருங்கவலையையும் உண்டாக்கியது. இதே நிலைதான் வெங்கட்டம்மா முதல் கொண்டு மெகுருநிசா பேகம் வரை, பேதம் இல்லாமல் விரவி இருந்தது. ராமா, கிருஷ்ணான்னு பாக்கியலட்சுமி கோயில் முன்னால  கையேந்தி வந்தனமும் வாழ்த்தும் சொல்லி, நாலு காசு பிச்சை வாங்கிப்  பிழைத்தோம். சார்மினார் பார்க்க வர்றவங்களும், பாக்கியலட்சுமியை தரிசனம் செய்ய வர்றவங்களும் தானம், தர்மம் செய்வாங்க. யாரோ அமேரிக்கவில இருந்து ஜனாதிபதி மக வர்றாளாம். அந்த மகராசி மூலமா அரசாங்கத்துக்கு நிறைய உதவி கிடைக்குமாம். நிறைய சலுகைகளும், தொழிலும் கிடைக்குமாம். அதனால அந்த மகராசி வந்து போறவரைக்கும் இந்த ஐதராபாத் பட்டினத்தில பிச்சைகாரங்களே கண்ணிலே படக் கூடாதாம்! இந்த மாநிலத்தை ஆளுற மவராசன் உத்தரவு போட்டுட்டாராம். ஆமாம், நாங்க கையேந்தக் கூடாதுன்னு சொல்லி, இந்த அரசாங்கம் கையேந்தப் போகுதாம் என்று நினைத்த வெங்கடம்மா சிரித்துக்கொண்டாள்.            

“ஏய்  கிழவி, என்ன மனுஷன்  கத்தறது காதிலே விழுகலையா. ரயில் வந்து நிக்கிது. எல்லாரும் ஏறிகிட்டிருக்காக. நீ நட்ட நடுவுல நின்னுக்கிட்டு சிரிச்சுகிட்டு நிக்கிறீயே. பையித்தியம் எதுவும் பிடிச்சிறிச்சா. பல்லக் காட்டிகிட்டு நிக்கறியே!” என்று காவலர் திட்ட சுதாரித்து அவரிடம் சென்றாள் வெங்கட்டம்மா”. அய்யா, புண்ணியம்  கிடைக்கட்டும் உங்களுக்கு!. தலை சுற்றி கண்ணு இருட்டிக்கிட்டு வருது. கொஞ்ச நேரம்  உக்காந்து ஆசுவாசப்படுத்திக் கிட்டு அடுத்த ரயிலு ஏறறேன். கொஞ்சம் கருணை காட்டுங்க மகராசா!” என்று கெஞ்சினாள். காவலர் கருணைக்கண் திறந்து சைகை காட்ட, அவள் சற்றுத்தள்ளி இருந்த கல்பெஞ்சில் உட்கார்ந்தாள்.  உருது, இந்தி, தெலுங்கு என்று பலமொழிகளில் சொல்லப்பட்ட வார்த்தைகள் ‘ஐயோ வகுத்துக்கு சோறு போட்டு பாதுகாத்த பூமி, பழகின தேசத்தை விட்டு திசை தெரியா தேசத்துக்கு விரட்டி விடறாங்களே’ என்ற புலம்பல் தான். அரசாங்கத்துக்கு ஆயிரம் கண்ணு, ஆயிரம் காதுக இருக்கு. அது இந்த மாதிரி துயரங்களை பார்க்கவோ, கேட்கவோ முடியுமா. கல் உருகலாம். கல்லா நிற்கிற மனுஷன் இரங்குவானா.? தரகன் வந்தான்,” என்னக் கிழவி வண்டியில ஏறாம வாயை மென்னுகிட்டு இருக்கே? பத்தி வந்ததில் ஒரு ஆளு குறையுதுன்னு தேடித்தேடி தவிக்கிறேன்.இங்கே வந்து வக்கனையா உக்காந்திருக்கவ.. எந்திரி கிழவி!” புண்ணியவானே கிறக்கமா தலை சுத்திகிட்டு வருதுன்னு, போலீஸ்கார தர்மதுரை கிட்டே கேட்டுட்டு உக்காந்துருக்கேன் சாமி. திக்கு தெரியாமப் போறோம். முதல் ரயிலில் போனா ஏன்னா, அடுத்த ரயிலில போனா என்ன புண்ணியவாளரே என்று வெங்கட்டம்மா கெஞ்சினாள். சரி, அடுத்த வண்டியிலே கண்டிப்பா எறிரோனும் என்று தரகர் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு காவலரைப் பார்த்தான். காவலர் மீசையை முறுக்கியபடி பார்வையை சுழலவிட்டபடி இருந்தார். அவரது செவிமடல் விடைத்து இவர்கள் பேச்சைக் கேட்டபடி இருந்தது. அடுத்த அரைமணியில் இன்னொரு ரயில் வந்து நின்றது. அதற்கும் ஒரு கூட்டத்தை திரட்டிக்கொண்டு வந்தனர். தரகர் வெங்கட்டம்மாவிடம், ஏய் கிழவி இந்த ரயிலில் ஏறிரியா, பிச்சைக்கார ஆம்பிளைக மாதிரி, ஜெயிலுக்குப் போறீயா? என்று அதட்டி பிடரியைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டி ரயில் ஏற்றி விட்டான். உட்கார இடமில்லை. கழிவறைக்குப் போகும் வழியருகே வாகாக சாய்ந்து உட்கார்ந்தாள். முதுகை முட்டுக்கொடுத்து உட்கார்ந்தது உடம்புக்கு இதமாக இருந்தது. வண்டி குலுக்கலோடு மெல்ல நகர்ந்தது. பிடிமானம் இல்லாதாததால் பெட்டியின் இரும்புச் சுவரில் மீண்டும் நன்கு சாய்ந்து கொண்டாள்.                       

ஐதராபாத் நகரை விட்டுப் போவது மனம் ஒப்பவில்லை. பிறந்து வளர்ந்து வாக்கப்பட்டு, பிள்ளைகளைப் பெற்று, கணவனையும் பறிகொடுத்து பேரப்பிள்ளைகளையும் காண வாய்த்த கிராமத்தை விட்டு மகனாலும் மருமகளாலும் விரட்டப்பட்டு வந்தபோது ஐதராபாத் நகரல்லவா வாழ மடி கொடுத்தது.! உறவு உதறி எறிந்த போதும் வறட்டு கவுரவம் பார்த்து உயிரை விட விருப்பமில்லை.வாழ விதிக்கப்பட்ட உயிரை வாழ்ந்தே தீர்ப்பது என்ற முடிவு தன்னைப் போன்று நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்ததும் தோன்றியது. சார்மினாரைப் பார்க்க வருபவர்களும், பாக்கியலட்சுமி கோயிலுக்கு வருபவர்களும் தரும் காசும், தின்பண்டங்களும் வெங்கட்டம்மா போன்ற அபலைகள் உயிர் காத்தது. பிச்சை வாங்கிப் பிழைப்பது கேவலம் தான். ஆனால் திருடிப் பிழைப்பதை விடவோ, ஏயிச்சுப் பிழைப்பதை விடவோ  மோசமானதல்ல. இப்படி பிழைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு இல்லாத கேவலமோ, அருவருப்போ தனக்கில்லை.தள்ளியவன் குற்றவாளியா, விழுந்தவள்  குற்றவாளியா என்று தனக்குள்ளே கேட்டுக் கொள்வாள். ஆனால் வெங்கட்டம்மா சங்கராந்தியோ, பதுக்கம்மா பண்டிகையையோ, கிராமத் திருவிழாவோ நெருங்கி வந்துவிட்டால் கிராமத்துக்கு போய் தன்னிடம் உள்ள சேமிப்பைக் கொடுத்து பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவிவிட்டு மகள், மகனோடு உறவை  உயிர்பித்துவிட்டு மூன்றாம் நாள் ஐதாராபாத் திரும்புவாள் பிச்சை எடுத்த காசு. உறவுகளுக்கு அருவருப்பில்லை.இப்படி திருவிழாக்களுக்கு போய் காசுகொடுத்து உறவாடி வருவது, தன்னை விரட்டிவிட்டவர்களை பழி தீர்த்துக் கொள்வது போல உணர்வு வெங்கட்டம்மாவுக்கு ஏற்படுவதுண்டு.பெருநகருக்கு வந்தபின்தான் தன்னைப் போல நூற்றுக்கணக்கான வெங்கட்டம்மாக்கள் இருப்பதை உணர்ந்து தன்னைத் தேற்றிக் கொண்டாள். இப்போது திக்கு தெரியாத ஊருக்கு விரட்டப்படுகிறோம்.ஊர் திரும்புவோமா, மாட்டோமா, திருவிழா தோறும் பார்த்து பாவனைக்கவது சிரித்துப் பேசும் சொந்தம் பந்தங்கள் தன்னைக் காணாது நினைத்தாவது பார்ப்பார்களா என்ற யோசனையோடு ரயிலின் தாலாட்டலில் கண்ணயர்ந்து விட்டாள்.

ஜனவெக்கையில்  குளிர் தெரியவில்லை.பலர் பல மொழிகளில் பேசுவது புரிந்தும் புரியாமல் காதில் விழ  கனவும் நனவுமாய் படுத்துக் கிடந்தாள். யாரும் இவளைப் பற்றி கவலைப் படவில்லை. இவளும் எவரைப் பற்றியும் கவலைப் படாதுபோல் படுத்துக் கிடந்தாள். உடல் அலுப்பும் மன அலுப்பும் அழுத்தப்படுத்திருப்பவர்கள் எழுந்திருக்கும் வரை பிணம் தான்.! படுத்துக் கிடக்கும் அவளை கடந்து செல்லும் எவரும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. சுற்றியுள்ள மனிதர் இறங்கியதால் வெக்கை குறையவும் வண்டியின் வேகத்தைக் கிழித்து நுழையும் குளிர்காற்று அவளை உயிர்ப்பித்தது. கண் திறந்து பார்வையை சுழற்றினாள். அருகருகே இடித்துக்கொண்டு குந்தியிருந்த சகப்பிச்சைகாரர்கள் இறங்கியிருந்தார்கள்.சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இவள் ஒருத்தி மட்டுமே பிச்சை எடுப்பவள். மற்றவர்கள் பயணிகளாகத் தென்பட்டனர். அவளுக்கு திக்கென்றது. பேச்சுத் துணைக்குக்கூட சகபாடிகள் யாருமில்லையே என்ற ஏக்கம் தாக்கியது. எல்லோரும் இறங்கவேண்டிய இடம் நெருங்கி விட்டதுபோல் எல்லோரும் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். பெரும் பெரும் கட்டடங்களுக்கிடையே எதிரெதிர் திசையில் ரயில்கள் ஊர்வதும், விரைவதுமாக இருந்தன. அருகிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்ணிடம் எந்த ஊர் வரப் போகிறது என்று கேட்டாள். சென்னை. இதுதான் கடைசி ஸ்டேஷன்  என்றாள். வெங்கட்டம்மா  கழிவறை சென்று வந்து முகம் கழுவி தனது துணிப்பையை  எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானாள். எல்லோரும் இறங்கியபின் இறுதியாக இறங்கி தனக்கு முன்னே செல்பவர் பின்னே நடந்தாள். பயணிகள் வெள்ளத்தில் மிதந்து ஊர்ந்தாள். தன்னிடம் பேசிய பெண்ணை அடையாளாமாகக் கொண்டு நகர்ந்தாள். வாகன நெரிசலுகிடையில் கிடைத்த சந்தில் அந்தப்பெண்ணைப் பின்பற்றினாள்.சாலையைக் கடந்த பின் இன்னொரு ரயில்நிலையம் போனாள். பூங்கா ரயில் நிலையம் என்றார்கள். படிகளில் ஏற முயலும் கூட்டம் கண்டு தயங்கி நின்றாள். இதற்குள் தனது அடையாளப் பெண்  கூட்டத்தில் கரைந்து விட்டாள். முன்னோக்கி இழுத்துச் செல்லும் இலக்கு இன்றி திகைத்து நின்றாள்.பசி கண்ணைக் கட்டியது. சிலர் போவோர் வருவோரிடம் கையேந்துவது கண்டதும் உறவினர்கள் சுற்றியிருக்கும் தெம்பு வந்தது. இவளும் மெல்லக் கையேந்தி தெலுங்கில் கெஞ்சியபடி படி ஏறினாள். திடீர் என்று கரைநோக்கி வரும் அலைகள் போல் பயணிகள் வருவதும், கடலுக்குள் திரும்பும் அலைகள் போல் வற்றிபோவது போலும் பயணிகள் வரத்தும் போக்கும் இருந்தது.     வெங்கட்டம்மாள் கை ஏந்தியபடி மாடிப்படிகள் ஏறும்போது கூட்டம் வடிந்திருந்தது.                           

இவள் அனிச்சையாக கையேந்தும் போது அவள் முன்னால் ஒரு வயதான பெண் ஒற்றைக்காலோடு அம்மா என்று கையேந்தி இருந்தாள். வெங்கட்டம்மாவுக்கு வெட்கம் வந்து விட்டது. பிச்சைக்காரியிடமே பிச்சை கேட்டுவிட்டோமே என்று ஒரு கணம் உறைந்து நின்றாள். இந்த நொடிபொழுதில், “அய்யோ பாவம்! பசி கிறக்கம் போல. இந்தாம்மா, இந்த இட்டலிப் பொட்டலத்தை சாப்பிடு.” என்று அந்தப்பெண் இட்டலிப் பொட்டலத்தை நீட்டினாள்.  “ஐயோ, கடவுளே, நீயே கால் முடத்தொடு ஒத்தைக்காலோடு சிரமப்படறே. இவ்வளவு உயரத்தில் படியேறி வந்து உக்கார எம்புட்டு சிரமப்பட்டு இருப்பே. உங்கிட்ட வாங்கறது எவ்வளவு பெரிய பாவம். நீ, சாப்பிடம்மா.” என்று வெங்கட்டம்மா கனிவாகச் சொன்னாள். அந்தப் பெண் சிரித்தாள்.                                                                               “உன்னை மாதிரி நான் ஒத்தப்பேரி இல்லம்மா.நாங்க பெரிய கூட்டம். எங்காளுகளே எனக்கு சாப்பிடக் கொடுத்து இங்க தூக்கிவந்து உக்காரவச்சிட்டுப் போயிருவாங்க. இது எனக்கு மத்தியானத்துக்கு திங்கத்தான். நீ தமிழ் தெரியாதவளாக இருக்கே. அதனால இதை சாப்பிட்டு விட்டு அங்கிட்டு வேற இடம் பாரு” என்றாள்.  “அப்படியா, அம்மா நான் உங்க கூட்டத்தோடு சேர்ந்துக்கவா” “ஐயோ கடவுளே, உலகம் தெரியாதவளா இருக்கே. இது பெரிய கொள்ளக் கூட்டம் தாயீ. தினசரி வசூல் குறைஞ்சா அடிச்சே கொன்னுருவாங்க. நான் மாட்டிக்கிட்டுப் படறது போதாதா. நீ என்னை மாதிரி சிக்கிக்காம சுதந்திரமா சுத்தி திரி தாயி. இந்தா இட்லியை சாப்பிட்டு பசிகிறக்கம் தீர்த்து, அங்கிட்டு நட” என்றாள் காலிழந்த பெண் .

 

;