headlines

img

தமிழ் அறிவோம்- எளிய வழியில் இலக்கணம்-9 கோவி.பால.முருகு

அன்புச் சிறுவர்களே வணக்கம், இன்று குற்றியலிகரம் அலகு பெறாதது குறித்துப் பார்க்கப்போகிறோம்.குற்றியலிகரம் என்பது இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது.குற்றியலுகரத்தின் முன்னே வருமொழியில் யகர வருக்க எழுத்து வருமானால் அதாவது ய,யா,யி இன்னும் அதன் தொடர்ச்சியாக வரும் எழுத்துகள் வந்தால் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாகத் திரியும் அந்த இகரத்திற்குப் பெயர்தான் குற்றியலிகரம்.எடுத்துக்காட்டாக கீழுள்ள குறள்பாவைப் பாருங்கள். வாய்/மை எனப்/படு/வ   தியா/தெனின் யா/தொன்/றும் தீ/மை யிலா/த சொலல். இக்குறள்பாவைப் பொருள் விளங்கப் பிரித்துஎழுதினால் “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்”. என்று எழுதலாம்.இப்போது சீரும் தளையும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். வாய்/மை -நேர் நேர்-தேமா எனப்/படு/வது-நிரை நிரை நிரை-கருவிளங்கனி யா/தெனின்-நேர் நிரை-கூவிளம் யா/தொன்/றும்-நேர் நேர் நேர்-தேமாங்காய் தீ/மை-நேர் நேர்-தேமா இலா/த-நிரை நேர்-புளிமா சொலல்-நிரை-மலர் முதற்சீரில் மா முன் நிரை வந்துள்ளது சரியானது.அடுத்த இரண்டாவது சீரில் கனி வந்திருக்கிறது.கனிச்சீர் வெண்பாவில் வராது.எனவே ‘எனப்படுவது’என்பதில் உள்ள ‘து’ குற்றியலுகரம். குற்றியலுகரத்தின் முன்னே வருமொழியில் யகர வருக்க எழுத்து வந்தால்..அதாவது ‘யாதெனின்’ என்ற சீரில் முதலெழுத்து யகர வருக்க எழுத்து வந்திருக்கிறது அல்லவா? அப்படி வந்தால் உகரம் இகரமாகத்திரியும் என்பதால் உகரம் திரிந்து இகரமாகி த்+உ- என்பதில் உள்ள உகரம் இகரமாகத் திரிந்து த்+இ=தி ஆகி “எனப்படுவதி” என்றாயிற்று.அடுத்த சீரில் “யாதெனின்” என்று இருப்பதால் இரண்டு சீரும் ஒன்றுகிறதா என்று பார்க்கவேண்டும்.எனப்/படு/வதி – நிரை நிரை நிரை- கருவிளங்கனி.வெண்பாவில் கனிச்சீர் வராது என்பதால் ‘தி’ என்ற எழுத்தை அடுத்த சீரோடு சேர்த்தால் “எனப்படுவ  தியாதெனின்”எனவரும். எனப்/படு/வ -நிரை நிரை நேர்- கருவிளங்காய்  தியா/தெனின் -நிரை நிரை காய் முன் நிரை வந்திருக்கிறது. இது பிழை.  காய்முன் நேர் வரவேண்டும். இங்கேதான் ஒன்றைத்  தெரிந்துகொள்ளவேண்டும். மூன்றாவது சீரில்  தியாதெனின் என்பதில் உள்ள ‘தி’ என்பது குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது அல்லவா? எனவே, இலக்கணப்படி குற்றியலிகரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அவ்வெழுத்தை விட்டுவிட்டுப் பாருங்கள் தியா/தெனின் என்பதில் தி எழுத்தைவிட்டுவிட்டால் யா/தெனின் என்று இருக்கும். ‘யா’ என்பது ஒரு எழுத்துதானே? முன்பு சொன்னதுபோல அசை பிரிப்பதில் ஒரு எழுத்து வந்தால் நேர் அசையாகும்.இப்போது காய் முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளை ஆயிற்று (குறிப்பு: நிலைமொழி, என்பது ஒரு செய்யுளில் ஒரு சொல்லுக்கு முன்னே இருப்பது வருமொழி என்பது அதற்கு அடுத்து வருவது. எழுத்துகளை எளிதாகச் சொல்ல கரம், காரம், கான் இவைகளைச் சேர்த்துச் சொல்வதுண்டு. இதற்கு ‘எழுத்துச்சாரியை’ என்று பெயர்.) வெண்பாவில் வரும் அளபெடையில் இன்னிசை அளபெடை மட்டும் அலகுபெற்றும், பெறாமலும் வரும். இதுவரை குறள் வெண்பாவை அலகிட்டு வாய்பாடு கூறுதல் பற்றி பார்க்கத் தொடங்கி வெண்பா இயற்றுமளவிற்கு  சொல்லியிருக்கிறேன்.அடுத்து வேறு வேறு இலக்கணப் பகுதிகளை எளிய வழியில் எவ்வாறு கற்றுக்கொள்வது என்பது குறித்து பார்க்கவிருக்கிறோம்.

;