headlines

img

குறள்நெறிப் பாடல் - இன்னா செய்யாமை

சிறப்பைத் தரும்பெரும் செல்வம் பெறினும்
 சிறிதும் துன்பம் தாரார் பிறர்க்கு!
கற்வம் கொண்டே தீமை பிறர்செயின்
 காப்பது பொறுமை மாசிலார் கொள்கை!

தானொரு தீமை செய்யா போதும் 
  தனக்குத் தீமை செய்ததை பொறுத்து
இன்னா செய்தவர் வெட்கிடும் படியே 
 இனியவை செய்வார் சான்றோர் ஆவார்! 

பிறவுயிர்த் துன்பம் தனக்கென எண்ணி 
 பெற்றிடும் வருந்தம் அறிவின் பயனாம்!
கறையாம் தீமை பிறர்க்குச் செய்யார்
  கற்றலின் சிறந்த மானுடப் பண்பார்.

துன்பம் சிறிதாய் ஆயினும் என்றும்
 துணிந்து அவற்றைச் செய்யா திருந்திடு!
துன்பம் உயிர்க்கு எதுவென உணர்ந்தவன்
 துணிந்து பிறர்க்கதைச் செய்யவும் மாட்டான்!

முற்பகல் தீங்கினைப் பிறர்க்குச் செய்தால்
  பிற்பகல் தேடியே வந்திடும் நமக்கு
மற்றவர் துன்பம் செய்தவர் சாரும்
  மற்றிது வேண்டார் தீமை செய்யார்!
 
இன்னா செய்பவர் இருத்தலே கேடாம்
 இருப்பவர் கேட்டைச் செய்திடின் சாடு!
தன்னால் நல்லதைச் செய்யா விடினும் 
 தந்திடும் அல்லவை செய்யா விடணும்!

கண்டால் மயங்குவர் (தகையணங்குறுத்தல்)

வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!
 வஞ்சியைக் கண்டுளம் மயங்கும் நெஞ்சம்!
காட்டும் விழிவேல் கண்ணை நோக்க
 கண்டேன் படையுடன் தாக்கிய போல!

கூற்றுவன் எதுவென முன்பு அறியேன்
 கூறிடும் அவளின் கண்ணில் கண்டேன்!
தோற்றம் கொண்டே கண்டவர் உயிரை
 தோற்கச் செய்யும் அவளின் கண்கள்!

கூற்றுவன் தானோ! கண்ணோ மானோ!
 கூறிடும் தன்மை மூன்றும் அடங்கும்!
மாற்றம் இவளின் வளைந்த புருவம்
 மாறி இருப்பின் நடுக்கம் தாரா!

சாயாக் கொங்கைச் சரிந்த ஆடை
 சான்றாய்க் களிற்றின் முகபடாம் ஒக்கும்!
பாயும் பகைவர் அஞ்சிடும் என்தோள்
 பாவை இவளின் நுதல்முன் தோற்கும்!
இயற்கை அணியாய் பார்வை நாணம் 
 இயைந்த இவளுக்கு அணிகலன் ஏனோ!
மயக்கும் கள்ளை உண்டவர் மயங்குவர்
 மங்கை இவளைக் கண்டால் மயங்குவர்! 

;