headlines

குறள்நெறிப் பாடல் -பிறனில் விழையாமை!

அறம்பொருள் கண்டு ஆய்ந்த பெரியோர்
  அடுத்தவர் துணையை அடைந்திட எண்ணார்! 
அறவழி நீங்கிப் பிறன்மனை விரும்பி
  அடைய நினைப்போர் கீழோர் ஆவார்!

நம்பிப் பழகியோர் இல்லம் தன்னில்
  நடத்தை தவறும் கீழோர் உலகில்!
வெம்பும் பிணத்திற் கொப்பாய் ஆவார்
  உயிரி ருந்தும் செத்தவர் அவரே!

பெருமை பலவும் பெற்றிருந் தாலும் 
 பிறன்மனை மேலே விருப்பம் கொண்டால் 
சிறுமை அடைந்து மதிப்பை இழந்து
 சீயென இகழப் படுபவர் ஆவார்!

எளிதாய் அடையப் பிறன்மனை விரும்பி
  எண்ணிக் கேடாய் நடப்பவர் உலகில் 
நலிவை அடைந்து நற்புகழ் கெட்டு
  நீங்காப் பழியை அடைவது திண்ணம்!
பிறன்மனை மீது முறையில் தவறி
  பிறக்கும் ஆசையில் நடப்பவன் வாழ்வில் 
அறமும் நீங்கிட அச்சமும் தோன்றும்
  அழிக்கும்  பகையுடன் தீமையே தங்கும்!

ஆண்மை என்பது பிறரின் மனையை
  அடைய நினக்கும் செயலாய் ஆகா!
மேன்மை மிக்கப் பேராண்மை என்பது
  மேவா பிறனில் விழையா திருத்தல்!
 

குறிப்பறிதல்!

நோய்தரும் நீக்கும் மருந்தாம் இவளின்
  நோக்கும் விழியின் இரண்டு கண்ணும்
பாய்ந்த அம்பாய் பாயும் கடைக்கண்
  பார்வை காமத்தின் பாதியின் அதிகம்!

அன்புப் பயிருக்கு நீராய் அமைந்தது
 அவளின் கடைக்கண் பார்வை நாணம்!
என்னுடை நோக்கில் நிலத்தை நோக்குவாள்
  என்னை நோக்கி நாணில் மகிழ்வாள்!

என்னை நேராய்ப் பார்க்கா போதும்
  எழிலுடைக் கண்ணைச் சுறுக்கிப் பார்ப்பாள்!
என்னை அறியார் போலவேப் பேசினும்
  என்னை மறக்கா நிலையினை அறிவேன்!

பகையிலாக் கடுமொழி பார்க்கும் கடுவிழி
  பார்ப்பதில் அயலார் காதலர் குறியாம்!
நகையுடன் எனைநோக்கிப் பரிவாய்ப் பார்க்கும்
  நங்கைத் துடியிடைப் பொலிவாய்த் தோன்றும்!

அன்பிலாப் பார்வை உடையார் போல
 அந்நியர் போல்வது காதலர்க் கியல்பு!
கண்கள் கலந்தே காதலில் ஒன்றிடின்
  களிப்பின் வாய்ச்சொல் கணக்கில் இல்லை!

;