headlines

img

தவம் - கோவி.பால.முருகு

குறள்நெறிப் பாடல்

தவத்தின் வடிவம் தன்துயர் பொறுத்தல்
   தாங்கியே பிறவுயிர் தன்னைப் போற்றல்
தவத்தின் ஒழுக்கம் உடையவர் தமக்கே
   தவத்தின் கோலமும் உரிமை ஆகும்! 

இல்லறம் செய்வோன் துறந்தவர் தமக்கு
  ஈந்திடச் செய்யவே துறவைத் துறந்தான்!
அல்லவை நல்லவை செய்திடு வோரை 
  அடக்குதல் உயர்த்துதல் தவத்தின் வலிமை!

விரும்பிய பயனை விரும்பிய வாறே
  விரைந்து பெற்றிட தவத்தை இயற்று!
அருஞ்செயல் செய்பவர் தவத்தில் நின்றார்
   ஆசையில் மற்றவர் வீணே செய்வார்!

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல
  சூழ்ந்திடும் துன்பம் தவத்தை உயர்த்தும்!
திடமுடன் தான்தன தெனும்பற் றறுப்பின்
  திகழ்ந்திடும் உயிரெலாம் தொழுது நிற்கும்!

துன்பம் தாங்கியே துணிவுடன் நின்றவர்
  துன்பமாம் இறப்பை வென்று வாழ்வார்!
மண்ணில் ஆற்றல் இலாதார் அதிகம்
  மனதில் உறிதி இலாமை யாகும்!

துறந்தவர் ஒழுக்கம் துளங்கிடப் பெற்றால்
  துறவறம் என்பதும் தூய்மை யாகும்!
துறவறம் இல்லறம் இரண்டும் நன்றே
  தூய்மை வாய்மை துணிந்திடப் பெற்றால்!

;