headlines

img

சொந்த காலில் நிற்போம் - ஐ.வி.நாகராஜன்

யோசனை

இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், ஏதேனும் ஒரு வகையில் பிறரைச் சார்ந்துதான் வாழ வேண்டியதாக இருக்கிறது. எனினும் இன்றைய காலகட்டத்தில் பண விஷயத்தில் பிறரை நம்பி இருக்கக்கூடாது என்ற கட்டாயத்துக்கு எல்லாரும் தள்ளப்படுகிறார்கள். தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்கின்றனர். பிற்காலத்தில் யாரையும் சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ்வதற்காக இளமைக்காலத்தில் கை நிறைய ஊதியம் பெற வேண்டும். வங்கிக் கணக்கில் அதிகப் பணம் சேர்க்க வேண்டும் என்றெண்ணிக்கொண்டு இதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இன்றைய தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எவர் ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், பணத்தைப் பற்றி கவலைப்படாது தான் நினைத்த வாழ்க்கையை வாழ்கிறாரோ அவரே உண்மையில் சொந்தக்காலில் நிற்பவர். நம்முடைய ஒய்வு காலத்தில் பிறரை நம்பாமல் வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக சேர்த்து வைக்க வேண்டும் ஆனால் பணத்தை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றி பல இளம் வயதினருக்குத் தெரியவில்லை.

ஓய்வு காலத்தில் இதுதான் நமது இலக்கு என்று முதலில் நாம் அடைய நினைப்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். சிலருக்கு உலகச் சுற்றுலா செல்ல வேண்டும். சிலருக்குப் அழகான வீட்டைக் கட்ட வேண்டும். சிலருக்குப் புனித யாத்திரை செல்ல வேண்டும். என்று ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அந்த ஆசையை நாம் இலக்காக நிர்ணயிக்கும்போது நம்மை அறியாமல் நாம் பணத்தைச் சேமிக்கத் தொடங்கி இருப்போம். சிலர் இப்போதைய பொழுதைக் கழித்தால் போதும் என்றெண்ணி எதிர்காலம் குறித்த தொலை நோக்குப் பார்வையின்றி செயல்படுவர். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, அநாவசியமான ஆடம்பர பொருள்களை வாங்குவது என்று வீண் செலவு செய்வர். ஒருசிலர் புதிய மாடல் மொபைல் வரும்போதெல்லாம் தனது பழைய மொபைலை நன்றாக இருந்தாலும் மாற்றிக்கொண்டிருப்பர். பழைய மொபைலைப் போல, வயதான பின் நம்மையும் பிறர் தூக்கி எறியாமலிருக்க பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும்.

நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் அப்படியே வைத்திருந்தால் அது பெருகிவிடாது. நல்ல துறை, லாபம் மிகுந்த துறையாக தேர்வு செய்து. அதில் நாம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் முதலீடு செய்ய தயங்குபவர்கள், அரசு திட்டங்களில் லாபம் மிக்கதைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே துறையில் மொத்த பணத்தையும் முதலீடு செய்வதற்குப் பதிலாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்யும்போது ஒரு துறையில் லாபம் வரவில்லை என்றாலும் மற்ற துறையில் சம்பாதித்திக்கொள்ளலாம். நம்மில் பலருக்கு சம்பாதிக்கும் பணம் செலவுக்கே சரியாகிவிடும் இதில் எங்கிருந்து சேமிப்பது என்று யோசித்துக் கொண்டு அலட்சியமாக இருப்பார்கள். ஆனால் நாம் தினமும் சேகரிக்கும் சிறிய தொகை கூட பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய ரூபாயின் மதிப்பும் எதிர்காலத்திய ரூபாயின் மதிப்பும் சமமாக இருக்கப் போவதில்லை. அதனால் நம்மால் இயன்ற அளவு, 10 ரூபாய் என்றாலும் சேமித்து வைக்கலாம். ஓய்வு காலத்துக்கான இலக்கை சரியாக நிர்ணயித்து திட்டமிட்டு வாழ தொடங்கி சேமித்தோம் என்றால் பணத்துக்காகப் பிறரை நம்பாமல் தலை நிமிர்ந்து வாழலாம்.

;