headlines

img

புற்றீசலாய் கவுரவ டாக்டர்கள் - கோவி. சேகர்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கேடன் தேசாய்க்கு 2009ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஒரு வருடம் கழித்து அவர் சி.பி.ஐ.யால் ஊழல் குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் மொத்தம் 867 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றுள் மத்திய பல்கலைக்கழகங்கள் 47, மாநில அரசுகள் நடத்தும் பல்கலைக்கழகங்கள் 389, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் 124, தனியார் பல்கலைக்கழகங்கள் 307. இவை அனைத்துமே பல்கலைகழக மானியக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டவை. இவை தவிர பல்கலைக்கழக மானியக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களும் 24 இயங்குகின்றன.  இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில்தான் 76 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதுபோல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 28 உடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இவற்றின் முக்கிய வேலை, அரசியலமைப்புக்கு உட்பட்டு,  பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைமுறைக்குள் கல்வியையும் அதற்கேற்ப பட்டங்களையும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குதல் மற்றும் புதிய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சிகள் சரி என நிபுணர் குழு அங்கீகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்குதல் ஆகும்.

இவை தவிர ஒரு முக்கிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. கல்லூரி படிப்பையும் தாண்டி, சமுதாயத்தில் மக்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், கலை, அறிவியலில் சாதனை புரிந்தவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்துலகில் சாதித்தவர்கள் என ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. இங்கு தான் பல சிக்கல்கள் வருகின்றன. இதில் பல முறைகேடுகள் நடப்பதாக பல அறிஞர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் (DARE) முன்னாள் செயலாளர் மங்கள ராய் குறிப்பிடும்போது, பல்கலைக்கழகங்கள் இது போன்ற கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும்போது பல முறைகேடுகள் நடப்பதாக கூறியுள்ளார். தங்கள் சுய லாபத்திற்காக பல பல்கலைக்கழகங்கள், பல்கலைகழக மானியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் கல்வித்துறையை சார்ந்த அமைச்சர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது இப்படி முறை இல்லாமல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் அவர்கள் தங்களுக்கு வேண்டிய சலுகைகளை பெறுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை அவ்வப்பொழுது தெரிவித்து வருகின்றனர்.  அறிஞர்களின் கருத்துக்களை நாம் அலட்சியமாக கடந்து செல்லவும் முடியாது. காரணம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கேடன் தேசாய்க்கு 2009ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஒரு வருடம் கழித்து அவர் சி.பி.ஐ.யால் ஊழல் குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளில், முக்கியமாக தனியார் பல்கலைக் கழகங்கள் தங்கள் சுய லாபத்திற்காக நூற்றுக்கணக்கான அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டங்களை அளித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்பொழுது நிலைமை இன்னும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்களில் அரசியல் வாதிகளால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களில் சில, தங்களுக்கு அரசியல் ரீதியாக பதவி தரும் அரசியல் வாதிகளுக்கும், தங்களுக்கு தேர்தலில் நிற்க கட்சி சார்பாக வாய்ப்பு தரும் அரசியல் வாதிகளுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் தரும் மோசமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை இப்படியே முறைபடுத்தாமல் விட்டுவிட்டால், இது ஓர் புற்றீசலாய் பரவி, நாளடைவில் உண்மையில் கஷ்டப்பட்டு படித்தவர்களும், ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தத்துவ மேதைகளும் தங்களை டாக்டர் என்று சொல்லிக்கொள்ளவே அவமானப்படுவார்கள்.

இனியாவது இப்படி கவுரவ டாக்டர் வழங்குவதை பல்கலைக்கழக மானியக்குழு முறைப்படுத்த வேண்டும். இனி கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால், பல்கலைக்கழகங்கள் அந்த நபர் பற்றிய குறிப்புகள், அவர் ஆற்றிய தொண்டு, சமுதாய சேவை, இலக்கிய அறிவு, அவர்களின் படைப்புகள், சாதனைகள் இவற்றுடன், ஏன் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அனுப்பட்டும். அதன்பின் மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாராத அறிஞர்கள் குழு ஒப்புதல் அளித்தால் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கலாம். இது ஒரு ஆலோசனைதான். நம் நாட்டில் இருக்கும் முறையான டாக்டர்களின் கவுரவம் காக்க, பல்கலைக்கழக மானியக்குழு நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புவோம்.


 

;