headlines

img

மருதாணி - சே. தண்டபாணி தென்றல்

“நா ஒன்னு கேப்ப மாட்டேன்னு சொல்லக் கூடாது”. அழகான பானு பொறுமையாக என்னிடம் அதுவும் முதன்முறையாகக்  கேட்ட கேள்வி. முக மாறுதல் ஏதுமின்றி இயல்பாகவே முகத்தை வைத்துக் கொண்டு ‘ம்ம் சொல்லு’ என்றேன்.  சரவணனும் பானுப்பிரியாவும் விடுதியில் தங்கி முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார்கள். சகவகுப்பு மாணவர்கள். முதல்நாள் வகுப்புக்கு வந்ததுமே பானுவென்று தெரியாத பானுதான் சரவணன் கண்ணுக்குத் தெரிந்தாள். அழகாக இருப்பவர்கள் இந்த ஜென்மத்தில் நம்முடன் பேசமாட்டார்கள் என்பது சரவணன் இளங்கலை படித்த கல்லூரியில் கண்டுகொண்ட விஷயம் அல்லது அனுபவப்  பாடமாகும். அதனால் எப்போதும் போல கடைசி பெஞ்ச் வா வாவென அவனை அழைத்து உட்கார வைத்துக் கொண்டது. பானுப்பிரியா தன் அழகான கூந்தலை காதிற்கு வராமல் கோதி விட்டுக் கொண்டாள்.தலைக்கு குளித்திருந்ததால் அடிக்கடி முகத்திற்கு ரயில்வே கேட் போல வந்து நின்றால்  ஒதுக்காமல் என்னதான் செய்வது.  பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம் பேசிக் கொண்டே சிரித்தாள் அல்லது புன்னகைகளை மரமல்லி பூக்களைப்  போல உதிர்த்துக் கொண்டேயிருந்தாள். சரவணன் முகம் திருப்பி நோட்டை எடுத்தான். முதல் நாளின் இறுதி மணி ஒலித்தது. எல்லோரும் கல்லெறியாமலேயே தேன்கூட்டிலிருந்து தேனீக்கள் குடிபோவதைப்போல வகுப்பிலுள்ள மேஜை, கரும்பலகையிடம் சொல்லாமல் கலையத் துவங்கினர்.

மாலை ஐந்து மணிக்கும் மேல் இருக்கும். நித்யா மேமின் ஆய்வகத்தில் சரவணன் உட்பட ஜாஸ்மினும் பானுவும் அமர்ந்திருந்தனர். சௌகார்த்திகா அப்போதுதான் மாடிக்கு டெஸ்ட்டியூப் சகிதம் சென்றிருந்தது, இங்கு ஒரு ஆள் குறைவதற்கான காரணமாகும். இரண்டாமாண்டு என்பதால் ஆய்வறிக்கைக்காக நால்வரும் ஒரே ஆய்வகத்தில் சேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு, அதுவும் இந்த ஆய்வகம் வர நித்யா மேமே முழுமுதற் காரணமாக இருக்கலாம். வெறும் நடை, உடை, சொற்களில் பகட்டாக இருக்கும் பேராசிரிய கும்பலுக்கு மத்தியில் நிதர்சன பேராசிரியையாக இருப்பவர் நித்யா மேம். பல அரட்டைகள் முடிவிற்கு வந்து, எல்லோரும் ஏதேனுமொரு ஞாபகங்கள் வராத தருணத்தில் அப்போது ஜாஸ்மினும் லேபிற்கு வெளியே ஹெக்சேன் இருக்கிறதாவென தேடப் போயிருந்த சமயம் சரவணன் ஆரம்பித்தான். “இங்க எனக்கு கெடச்ச மொதோ பிரண்டே நீதான்” என்பதை ஏற்கனவே பானுவிடம் சொல்லியிருந்தாலும் அதற்கான  பின்சம்பவங்களை சரவணனின் மனம் சொல் சொல் என்றது. பானுவைப் பார்த்தான் அதே அழகான முகம். “நானெல்லா நீ எங்கிட்ட பேசுவன்னு நெனச்சு கூட பாக்கல.” இதை கொஞ்ச நேரம் கழித்து வந்த ஜேஸ்மின் கேட்டதும்  அய்யோடா. என பொதுவாக கூறிக் கொண்டாள். அன்று வெள்ளிக் கிழமையாகவேறு இருந்தது. “நாளிக்கு ஊருக்கு போரேனே …!” எதோ ஸ்கூல் பையனைப் போலச் சொன்னதும் பானு முதலில் குறிப்பிட்டதைச் சொல்லி “அப்டீனா மருதாணி கொண்டுவா.. அப்டியே வெறுந் தலைய இல்ல அரச்சுதான். எங்க ஹாஸ்டல்ல அரைக்கறதுக்கு ஒன்னும் வசதியில்ல”. “ம்ம் சரி” என்று சரவணன் சொல்லி வைத்தான்.

வீட்டிற்கு வர வர மருதாணி நெனப்பாவே இருந்தது. பேசஞ்சர் ரயில் ஒரு பக்கம் கிராசிங் அலையில் ஆமையைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் பேக்கை வைக்காமலே சரவணன் மருதாணியைத்தான் சென்று பார்த்தான். “இன்னிக்கு நைட்டே பறிச்சு அரச்சு எடுத்து வெக்கனும்.” கேட்டது பானுவென்பதால் சற்று அதீத கவனம் சரவணனுக்கு இருந்ததில் வியப்பொன்றுமில்லை. சனிக்கிழமை சாயங்காலம் வருவேனா என்றது. அது வருவதற்குள் சரவணன் மருதாணி பற்றிய யோசனையில் சாய்ந்தான். ஆடுமேய்க்கச் சென்ற அம்மா இன்னமும் வரவில்லை. மருதாணிக்கு மருதாணியென்று பெயர் வைத்தவன் சுத்த முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். காட்டின்மேல் வீடிருக்கிறது. வீட்டிற்கு பக்கத்தில் மருதாணிச் செடியிருக்கிறது. அப்படியென்றால் காட்டைக் குறிக்கும் ஆதிப் பெயரான முல்லாணி என்றல்லவா வைத்திருக்க வேண்டும். எந்த வயலில் மருதாணி இருந்திருக்கிறது. ஒருகாலத்தில் காட்டு விலங்குகளாகத் திரிந்த ஆடு மாடுகளை தற்போது வீட்டு விலங்குகள் என்று குறிப்பிடுவதைப் போல மருதாணி விஷயத்திலும் நிகழ்ந்திருக்கலாம். சரவணன் தனக்குத் தானே உபாயங்களையும் கூறிக் கொண்டான். தூக்கம் கண்ணைத் திமிறிக் கொண்டு வந்தது. தூங்கிப்போனான். 

சரவணன் அன்று காலை விழிக்கும்போது காலை ஆறு மணியாகியிருந்தது. அன்று பார்த்து பல் குச்சி ஒடிக்கச் சென்ற வாத்தி என்கிற திருமலைவாசன் கையில் ஒரு பூவோடு வந்திருந்தார். எந்தப் பெண்ணும் கொடுத்திருக்க ஒரு துளிகூட வாய்ப்பில்லை. விதிவிலக்காக ஒருவேளை அவரின் தங்கச்சி கொடுத்திருக்கலாம். “சரவணன் இது என்ன பூவுன்னு சொல்லுங்க பார்ப்போம்?” மூக்கினருகில் வைத்துக் கொண்டே கேட்டார். சரவணன் முகர்ந்தான். எல்லா பூக்களின் மகரந்தங்களையும் ஒன்றுசேர வைத்து ஒரு மலர் செய்த மணமொன்று மெல்ல மெல்ல கமழ்ந்தது. அது தேன் கூட்டில் மேலுள்ள தேன் ராட்டைப் பிய்த்தால் அதற்கு கீழிருக்கும் மகரந்த அடையின் வாசம். மல்லி, முல்லை, செண்பகமென்றால் படக்கென்று சொல்லி விடாலாம்தான் . +2வில் தாவரவியல் படித்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அடையாளமற்ற வழியில் ஒரேவழி அதன் மணம்தான். இப்போதோ அதுவும் தெரியவில்லை. “தெரியலிங்களே வாத்தி”. பொய்க் கனியை பூசி மெழுகுவதைவிடவும், உண்மைக் காயை படக்கென்று கடிக்கக் கொடுத்துவிடுவது சாலச் சிறந்தது. “அட என்ன சரவணன் இதுங்கூடத் தெரியல நீலா எம்எஸ்ஸி படிச்சு. வழக்கமான நீண்ட அறுவைக்குப் பிறகு வாத்தியின் வாய் உதிர்த்தது. மருதாணி.

மாலை ஆறு மணியாகியிருந்தது. வீட்டில் தூங்கிய சரவணன் விழித்ததும் இருள் மெல்ல மெல்ல மரம், செடி கொடி, நிலங்களை ஒளித்து வைக்கத் துவங்கியிருந்தது. திடுமென எழுந்த சரவணன் முறத்தை எடுத்தான். அதிலுள்ள சாணிப்பத்துகள் வெடித்துக் கிடந்தன. இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் முறங்கள் பக்கத்து வீடுகளுக்கு வந்திருந்தன. கிழக்கில் தென்னை மரத்திற்குப் பக்கத்தில் இருந்த இரண்டு மருதாணிச் செடிகளை நோக்கி நடந்தான். முன்பெல்லாம் அதாவது சரவணன் தக்கடா புக்கடாவென நடக்கும்போது வீடே படு கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் முக்கியமான நோம்பி நொடிகளில் யாரையுமே கையில் பிடிக்க முடியாது. பெருங்கடைகளை பின்னுக்குத் தள்ளும்  அளவிற்குப் பலகாரங்கள் மற்றும் முதியோர் கூறும் புராண நாட்டுப் புறக் கதைகள் என எல்லோரும் கதைபேசி இரவுக்குத் துணையாக தன் தூக்கத்தை மறந்து கிடப்பார்கள். நோம்பிக்கு முந்தாநாளே மருதாணி அரைக்க ஆட்டாங்கல் தயாராகிவிடும். பக்கத்து வீட்டு சரசுமணி, சின்னப்பேபி, பெரிய பேபி ஆகிய இளவட்டங்களால் கொளவிகல் சதா வட்டமடித்துக் கொண்டேயிருக்கும். வெறும் மருதாணி தலை (இலையின் பேச்சு வழக்கு) மட்டும் அவர்களுக்குப் போதாதாம். எலுமிச்சை, பாக்கு என பக்கத்து வீட்டு சக இளஞிகள் சொன்னதைக் கலந்து சுற்றிக் கொண்டிருப்பர். அப்படினாதா செக்கச் செவேன்னு செவக்கும். சரசுமணியின் அண்மை ஆய்வு முடிவுகூட அவர்களின் கூற்றுக்கு ஒத்துப் போனதில் யாருக்கும் வியப்பேதுமில்லை. சரவணனுக்கு பேரதிர்ச்சி அல்லது வறட்டு இடி அங்கு காத்திருந்தது. எல்லா மருதாணித் தலைகளையும் ஆடு பதம் பார்த்திருந்தது. அதன் நுனியிளம்  குச்சிகள் கூட விஞ்சியிருக்கவில்லை. ஆனாலும் சரவணன் அதனருகில் நடந்தான். எஞ்சியிருந்த கொத்துக் கொத்தான மருதாணி விதைகளை நசுக்கி அருகிலுள்ள மண்ணில் தூவி நிலத்தைக் கீறினான். டப்பாவில் இரண்டு முறை தண்ணீரை அள்ளித் தெளித்தான். நாளை அல்லது நாளைக்கு மறுநாள் மருதாணி விதைகள் முளைக்கும். பிறகு பானுவின் முதல் எழுத்தைப் போன்ற காகிதத்தில்  அதே முதல் எழுத்தைக் கொண்டு ஒரு பதியம் தயார்செய்ய நினைத்தபடியே அவ்விடத்தைவிட்டு சரவணன் நகர்ந்தான். மருதாணிச் செடியைக் கடித்துக் குதறிய வெள்ளாடுகள் அம்மாவுடன் வீடு வரத் துவங்கியிருந்ததை சரவணன் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். அதிஷ்டவசமாக அவற்றின் முகங்கள் பானுவின் முகத்தைப் போலவே இருந்தன.

;