headlines

img

எளிய வழியில் இலக்கணம்-6 - கோவி.பால.முருகு

தமிழ் அறிவோம்

அன்புக் குழந்தைகளே வணக்கம். இன்று சீர் பிரித்தல் குறித்துப் பார்க்கப்போகிறோம்.சீர் என்றால் ஒரு சொல் என்று புரிந்துகொள்ளுங்கள்.ஒரு திருக்குறளைத் தவறாகக் கொடுத்தால் அதைச் சரியாகச் சீர் பிரித்து எழுதும் பயிற்சி. இதைத் தெரிந்து கொண்டாலே நீங்களும் வெண்பா எழுதலாம். உதாரணத்திற்கு ஒரு குறட்பாவை சீர்கள் பிழையாக எழுதுகிறேன் அதைக் கவனியுங்கள்.

“தீயவைதீய  பயத்தலால்  தீயவை
தீயினும்  அஞ்சப்  படும்.”
 

இக்குறட்பாவைப் பார்த்தவுடனேயே சீர் பிரித்தது பிழை என்பது தெரியும்.காரணம் குறட்பாவில் முதலடியில் நான்கு சீர்களும்,இரண்டாமடியில் மூன்று சீர்களும் வரும்.இங்கே முதலடியில் மூன்று சீர்கள் இருக்கின்றன.அங்கே நான்கு சீர்கள் வரவேண்டும்.இரண்டாமடியில் மூன்று சீர்கள் இருக்கின்றன.அதுவும் சரியாக முதலடியின் கடைசிச் சீரின் கடைசி அசை அடுத்த அடியின் முதற்சீரின் முதலசையோடு ஒன்றி சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

தீ/யவை-நேர் நிரை-கூவிளம்
தீ/யினும்- நேர் நிரை- கூவிளம்
அஞ்/சப்- நேர் நேர்- தேமா
படும் -  நிரை- மலர்
 

என்று வாய்பாடு கூறினால் விளமுன் நேர்,விளமுன் நேர்,மாமுன் நிரையும் வந்து இயற்சீர் வெண்டளை வந்திருக்கின்றது. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் என்பதனால் இது சரியானதே.அதனால் முதலடியில்தான் பிழை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.எதைப் பிரித்து நான்காவது சீராக்குவது என்பதைதான் நாம் கவனிக்க வேண்டும்.நாமே புதிதாக ஒரு சீரை எழுதிவிடக்கூடாது.மேலே உள்ள மூன்று சீரில்தான் நான்காவது சீர் இருக்கிறது.

தீயவைதீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
 

இக்குறட்பாவை நன்றாகப் படித்துப் பாருங்கள்.எந்த சீரில் இரண்டு சொற்கள் இருக்கின்றன?  தீயவை-தீய(இதில் இரண்டு சொற்கள் இருக்கின்றன.மேலும் இரண்டு சீராகவும் இருக்கின்றன.தீ/யவை-நேர் நிரை-கூவிளம், தீ/ய-நேர் நேர்-தேமா ) பயத்-தலால் (இதில் இரண்டு சொல்லும் இல்லை,பிரித்தால் ஓரசைச்சீர்தான் வரும்.அதனால் இச்சீரைப் பிரித்து இரண்டு சீர்கள் ஆக்க முடியாது.) தீ-யவை( இதிலும் இரண்டு சொற்கள் இருப்பதுபோல் தெரிந்தாலும்.பிரித்தால் ஓரசையாகத்தான் வரும். அப்படிப் பார்த்தால் தீயவை-தீய என்ற சீரைத்தான் பிரித்து இரண்டாவது சீராக்கலாம்.

“தீயவை  தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”
 

இப்போது  வெண்பாவிற்குரிய தளைகள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
தீ/யவை-நேர் நிரை-கூவிளம்-விளமுன் நேர்
தீ/ய-நேர் நேர்- தேமா-மாமுன்நிரை
பயத்/தலால்-நிரை நிரை-கருவிளம்-விளமுன் நேர்
தீ/யவை- நேர் நிரை-கூவிளம்-விளமுன் நேர்
தீ/யினும்-நேர் நிரை-கூவிளம்-விளமுன் நேர்
அஞ்/சப்-நேர் நேர்-தேமா-மாமுன் நிரை
படும்- நிரை-நாள்.     
 

வெண்பாவில் மா முன் நிரையும், விள முன் நேரும்,காய் முன் நேரும் வரவேண்டும்.மூவசைச்சீரின் இறுதி அசை நேர் அதாவது காய் என்றுதான் வெண்பாவில் வரும் நிரை என வந்தால் அது கனிச்சீராகும்..அதுபோல வெண்பாவில் கடைசிச்சீரைத் தவிர இடையில்  ஓரசைச்சீர்  வராது. அச்சீர் பிழையானது என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரிப்பதோடு எதன் முன் எது வரவேண்டும் என்பதையும் மனதில் கொண்டால் சீர் பிரிப்பது எளிது.நீங்களும் உங்கள் நண்பர்களைச் சீர்கள் பிழையாகச் சில குறட்பாக்களை எழுதச்செய்து அக்குறட்பாக்களைப் பிழையின்றி, சீரும் தளையும் சிதையாமல் எழுதிப்பாருங்கள்.இதைத் தெரிந்துகொண்டாலே நீங்களும் குறள் வெண்பா எழுதலாம்.வெண்பாவில் சீரும் தளையும் சிதைந்தால் அதாவது பிழையாக வந்தால்  குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஐகாரக்குறுக்கம்,உயிரளபெடை ஆகியவை அலகுபெறாமைக் குறித்தும்   மேலும் தளைகளைச் சரிசெய்ய இசைநிரை அளபெடையும்,இனிய ஓசைக்காக இன்னிசை அளபெடையும்,ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காகச் சொல்லிசை அளபெடைகள் வரும்.இவை குறித்து அடுத்தப் பாடத்தில் பார்ப்போம்.

;