headlines

img

கழுகும், காக்காவின் கூடும் - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

ஆலமரம் சுற்றிலும் விழுதுகள் விட்டு வேரோடி திரு வாரூர் தேர் போல நின்றது. காக்கா, குருவி, கிளி,  கொக்கு, மைனா, ஆந்தை என பற்பல பறவைகள்  அதில் கூடுகள் கட்டி குடியிருந்து வந்தன.  பறவைகளின் ஒட்டு மொத்த வீடாக இருந்த ஆலமரம் ஒற்றுமைக்கான மகிழ்வின்  அடையாளமாக இருந்தது. ஒரு மதிய நேரம், காக்கையின் கூட்டிலிருந்த குஞ்சுகளைக்  கவ்விச் செல்ல ஒரு கழுகு எங்கிருந்தோ வந்தது. காக்கைகள்  ஒன்று சேர்ந்து, குஞ்சுகளை நெருங்கவிடாமல் கழுகை துரத்தின. இதனால் கோபம் கொண்ட கழுகு, காக்கா கூடு கட்டியிருக்கும் மரம் தன்னுடையது என வம்பு செய்தது. இதை காக்கைகள் மட்டுமல்ல, மரத்தில் கூடு கட்டியிருந்த மற்ற  பறவைகளும் ஏற்க மறுத்தன.

எனவே, கழுகு பைசல் செய்ய கிளியை அழைத்தது.  கிளி,  காக்காவையும், கழுகையும் விசாரணை செய்தது.  கழுகு  சொன்னது. “என் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து,  காக்கா கட்டியிருந்த கூட்டில்தான் எங்களின் கூடு இருந்தது. அதனால் காக்கா ஒன்று கூட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் இல்லை குஞ்சுகளை எனக்கு இரையாக்க வேண் டும்” எனக் கத்தியது. கழுகின் கத்தலில் பயந்து போன கிளி சமா தானமாகப் போகலாம் என்றது. மற்ற பறவைகளுடன் கூடிப்  பேசிய கிளி, “இவ்வளவு பெரிய மரத்தில் உனக்கு பிடித்த  இடத்தில் கூடு கட்டிக்கொள், குஞ்சுகளுடன் இருக்கும் காக்கா வின் கூட்டை கேட்காதே” என கழுகுக்கு அறிவுரை கூறியது.

கிளியின் அறிவுரையை ஏற்க மறுத்த கழுகு படபடவென்று  இறக்கைகளை அடித்து பயம் காட்டியது.  கிளியின் கூடு இருக்கும் இடத்திற்கு அதன் பார்வை சென்று மீண்டது. இதனால் அச்சமடைந்த கிளி, இறுதியாக தன் தீர்ப்பை வழங்கி யது. “காக்கா அதன் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து அந்த கூட்டில் குடியிருந்து வருவதை நிரூபிக்கவில்லை. இவ்வ ளவு பெரிய கழுகு பொய் சொல்லும் என்று நான் நம்ப வில்லை. ஆகவே, காக்கா கூட்டைக் காலி செய்து, மரத்தின்  வேறு இடத்தில் கூடு கட்டிக் கொள்ள வேண்டியது. கழுகு,  காக்கா கூட்டில் குடியேற வேண்டியது”. கிளியின் தீர்ப்பை  எல்லா பறவைகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அன்பு டன் மிரட்டிய கழுகு, “காக்கா, கூடு இனி என்னுடையது. அதில்  உள்ள குஞ்சுகளும் என்னுடையது” என அதிரடியாக அறி வித்தது. குஞ்சுகளை ஒவ்வொன்றாய் விழுங்கியது.

;